10-ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் பள்ளியில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். 2021- 22ஆம் கல்வி ஆன்டில் 10ம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதினர்.
இதில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் அடைந்துள்ளனர். அதாவது 85.83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
12-ஆம் வகுப்பில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 96.32% பேரும், மாணவர்கள் 90.96% பேரும் தேர்ச்சி அடைந்தனர். தேர்வடையாத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் பள்ளியில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ’’2021-2022 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு கடந்த மே 2022 மாதத்தில் நடைபெற்றது. மேற்கண்ட 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.07.2022 முதல் 08.08.2022 முடிய துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்த துணைத்தேர்வில் தேர்ச்சி அடையும் பொருட்டு சார்ந்த பாட ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயின்ற பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திடுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்