அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் வில்லி ஸ்பென்ஸ் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


கடந்த ஆண்டு ஒளிபரப்பான அமெரிக்கன் ஐடால் நிகழ்ச்சியின் 19வது சீசனில் கலந்து கொண்ட பாடகர் வில்லி ஸ்பென்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் மேலும் ரசிகர்களிடம் பிரலமான இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி புளோரிடா மாகாணத்தில் பிறந்தார். பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே ஸ்பென்ஸ் தான் பாடிய வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு புகழ் பெற தொடங்கினார். 


2017 ஆம் ஆண்டில் டயமண்ட்ஸ் என்ற பாடலை பாடி வெளியான வீடியோ யூட்யூபில் வைரலானது. 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற அந்த வீடியோ அவரை அமெரிக்கன் ஐடால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரணமாக அமைந்தது. இதனிடையே நேற்று முன்தினம்  டென்னசியிலிருந்து அட்லாண்டாவிற்குத் திரும்பச் சென்ற போது டிராக்டர் மீது அவரது கார் மோதியதில் வில்லி ஸ்பென்ஸ்  பலியானார். 






அவரது மரணத்தை ஸ்பென்ஸின் மிக நெருங்கிய நண்பரான கே மைக்கேல் தனது பதிவின் மூலம் உறுதி செய்தார். இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடும் படங்களை பதிவிட்ட மைக்கேல், கடவுளே ஏன்? உண்மையாக நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். கண்ணீரில் இருக்கிறேன். மை லார்ட் வில்லி. எனக்கு பிடித்தவர்களில் ஒருவரான நீ இல்லாததது மிகவும் வலிக்கிறது என தெரிவித்திருந்தார். 






அதேசமயம் வில்லி ஸ்பென்ஸ் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு காரில் அமர்ந்திருந்தபடி, பாடும் வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார். அதில் ஆண்டவரே நீங்கள் என் மறைவிடம் என்ற கேப்ஷன் இடம் பெற்றிருந்தது. இரங்கல் தெரிவிக்கும் விதமாக இதற்கு  பதிலளித்த பாடகி கேத்தரின் மெக்ஃபீ, நீங்கள் இப்போது இயேசுவுடன் இருக்கிறீர்கள். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். எங்களிடம் இருந்த நேரத்திற்கு நன்றி என தெரிவித்திருந்தார். வில்லி ஸ்பென்ஸின் இந்த பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.