பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவரும் மாறி மாறி எதிர்தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த வகையில் இயக்குநர் அமீர் தற்போது ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஞானவேல் ராஜா தன் மீது சுமத்தி வரும் அவதூறுகள் மற்றும் வரம்பு மீறிய வார்த்தைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
'பருத்திவீரன்' படத்தின் மூலம் ஞானவேல் ராஜாவை, அமீர் ஏமாற்றிவிட்டதாக கூறி அவர் முன்வைத்த குற்றச்சாட்டு அனைத்தும் புனையப்பட்ட பொய்கள் என்றும் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது குறித்து வெளிப்படையாக ஊடகங்களுக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் தனக்கு இருக்கும் கண்ணியத்தை குறைக்கும் நோக்கத்தில் ஞானவேல் ராஜா தன் மீது இப்படி அவதூறுகளை கூறிவருகிறார். பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அவருடன் போடவில்லை என்றும் முதல் கட்ட படப்பிடிப்புக்கு மட்டுமே தொகையை கொடுத்து பின்னர் காணாமல் போனார் என்றும் ஞானவேல் ராஜா மீது அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவரின் அறிக்கையில் "பருத்திவீரன் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த அனைத்து விஷயங்களையும் அறிந்த திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூட இந்த பிரச்சினையை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அன்று நடந்த உண்மையை சொல்வதற்கு எனக்கு கொஞ்ச நேரம் கூட ஆகாது ஆனால் அது பலரின் வாழ்க்கையிலும் புயலை கிளப்பி விடும் என்பதால் அமைதியாக இருக்கிறேன்.
உண்மை இப்படி இருக்க, ஞானவேல் ராஜா என்னை பற்றி கூறிய விஷயங்கள் எனக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும் மன உளைச்சலை கொடுத்தது. அதில் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும் எளிதில் மீண்டு வந்துவிடுவோம். அவரின் சூழ்ச்சியில் பலியாக மாட்டோம். இது போல யாரையும் பொதுவெளியில் அவதூறாக பேச வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பருத்திவீரன் தொடர்பான வழக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது என்றாலும் அது குறித்த உண்மை நிலவரம் சிலருக்கு தெரியும் என்ற நிலையில் எனக்காக குரல் கொடுத்து என் பக்கம் உள்ள நியாயத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
'பருத்திவீரன்' பிரச்சினையை மறுபடி மறுபடி யூடியூபிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் தொடராமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது 'மாயவலை' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருப்பதால் இந்த பிரச்சினை குறித்து யாரும் என்னை அணுக வேண்டாம்" என தனது அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார் இயக்குநர் அமீர்.
அமீருக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் அமீர் மீது ஞானவேல் ராஜா முன்வைக்கும் கருத்துக்களை வன்மையாக கண்டித்து ட்வீட் ஒன்றை போஸ்ட் செய்துள்ளார் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார்.
பருத்திவீரன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அமீர் அண்ணன் தன்னிடம் இருந்து தான் கடன் பெற்றார் என்றும் அந்த பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை தான் என்றும் பகிரங்கமாக உண்மையை உடைத்துள்ளார் சசிகுமார்.
இது போல பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். ஸ்டாண்ட் வித் அமீர் என்ற ஹேஷ் டேக்குடன் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.