உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜானி டெப் அவதூறு வழக்கு குறித்து அவரது முன்னாள் மனைவி ஆம்பெர் ஹெர்ட் சமீபத்தில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
தனது முன்னாள் கணவர் ஜானி டெப் தன் மீது மீண்டும் அவதூறு வழக்கு தொடுக்கும் வாய்ப்புகள் இருப்பது குறித்து ஆம்பெர் ஹெர்டின் மனநிலை பற்றி கேள்வி எழுப்பிய போது, `நான் அச்சப்படுகிறேன்.. நான் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும், எப்படி சொன்னாலும் மீண்டும் என்னை இப்படி மௌனமாக்குவதற்காக மற்றொரு வாய்ப்பாகவே அது அமையும்’ என அவர் கூறியுள்ளார்.
ஆம்பெர் ஹெர்டுக்கு அவரது முன்னாள் கணவர் ஜானி டெப், `சர்வதேச அளவில் அவமானம் தேடித் தருவேன்’ என எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்ததையும், அது உண்மையாக நிகழ்ந்திருப்பது குறித்தும் கேட்ட போது, ஆம்பெர் ஹெர்ட், `ஆம், அவர் அவ்வாறு எனக்கு வாக்கு கொடுத்திருந்தார்.. நான் பாதிக்கப்பட்டவள் என்றாலும், என்னை யாருக்கும் பிடிக்காது.. நான் குற்றவாளிக் கூண்டில் நின்ற போது, நீதிபதிகளிடம் ஜானி டெப் இவ்வாறு சொன்னதைப் பற்றி கூறினேன்.. என்னை மனிதராக பார்க்குமாறும் கூறினேன்.. ஜானி டெப் இதனை ஒரு சத்தியத்தை நிறைவேற்றுவதைப் போல நிறைவேற்றியிருக்கிறார் என நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்னைகளுக்கு அடிப்படையாக இருந்த ஆம்பெர் ஹெர்டின் கட்டுரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு, அதன்மூலம் ஜானி டெப் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது நோக்கமா எனக் கேட்கப்பட்ட போது, `அந்தக் கட்டுரை அவரைக் குறி வைத்து எழுதப்படவில்லை’ எனக் கூறியுள்ளார் ஆம்பெர் ஹெர்ட்.
அவரது அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து கேட்ட போது, `வழக்கறிஞர்களுடன் மாறி மாறி போன் பேசாத போது மட்டுமே நான் முழு நேரத் தாயாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.
ஜானி டெப் பற்றி தற்போது அவர் என்ன நினைக்கிறார் எனக் கேட்கப்பட்ட போது ஆம்பெர் ஹெர்ட், `நான் அவரை விரும்புகிறேன்.. அவரை மனதார விரும்புகிறேன்.. உடைந்த உறவை மீண்டும் புதுப்பிக்க என்னால் முடிந்தவற்றை நான் செய்தேன். ஆனால் அது முழுமையாகவில்லை. அவர் மீது எந்தக் கெட்ட உணர்வுகளும் இல்லை. இது சிலருக்குப் புரியாமல் போகலாம்.. ஆனால் எவரையேனும் காதலித்திருந்தால் இந்த உணர்வை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்’ என ஆம்பெர் ஹெர்ட் தெரிவித்துள்ளார்.
தன் வழக்கு மீதான சமூக வலைத்தளங்களின் அழுத்தமே அதன் தீர்ப்பை இவ்வாறு தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ள ஆம்பெர் ஹெர்ட், `நடுநிலையான நோக்கம் கொண்ட நீதிபதிகளால் கூட இதனைப் புறக்கணிக்க முடியாத சூழல் உருவானது’ எனக் கூறியுள்ளார். மேலும், `ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தை இரண்டு, மூன்று முறை கடந்து செல்லும் போது, எனக்கு எதிரான பதாகைகள் தென்பட்டுக் கொண்டே இருந்தன.. மூன்று வாரங்களில் நீதிமன்றம் முழுவதும் கேப்டன் ஜாக் ஸ்பாரோ ரசிகர்கள் அவருக்காக கூடி நின்றார்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.