தன் காதலர் மற்றும் ட்ராவல் பார்னர் ஜகத் தேசாயை நடிகை அமலா பால் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
காதலரை கரம்பிடித்த அமலா பால்
முன்னதாக அமலா பாலின் பிறந்தநாள் அன்று அவரது காதலர் ஜகத் தேசாய் அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்த நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப் புகைப்படங்களை ஜகத் தேசாய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
“இரண்டு ஆத்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகமான பெண்ணுடன் கைகோர்த்து இந்த வாழ்நாள் முழுவதும் நடக்கப்போகிறேன்” என ஜகத் தேசாய் நெகிழ்ச்சியுடன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொச்சியில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் சூழ திருமணம் நடைபெற்று முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமலா பாலின் திரைப்பயணம்
கேரளாவை பூர்விகமாகக் கொண்டவரான நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அமலா பால், தொடர்ந்து கோலிவுட்டில் வெற்றிநாயகியாக வலம் வரத் தொடங்கினார்.
நடிகர் விஜய்யுடன் தலைவா, நடிகர் விக்ரமுடன் தெய்வத் திருமகள், தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி என பல ஹிட் படங்களில் நடித்த அமலா பால், டோலிவுட் சினிமாவிலும் கால் பதித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
முன்னதாக தெய்வத் திருமகள் திரைப்படத்தில் பணியாற்றியபோது இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் அமலா பாலும் காதலித்து பின் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்தனர்.
அதன் பின் அமலா பால் தேர்ந்தெடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், அதிகம் பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்களையும் தன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.
இரண்டாவது திருமணம்
இந்நிலையில் கடந்த அக்.26ஆம் தேதி அமலா பால் தன் 32ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சூழலில், அமலாவில் கணவர் ஜகத் தேசாய் அவருக்கு ப்ரொபோஸ் செய்தார். மேலும் என் ஜிப்ஸி குயின் எனக்கு ஓகே சொல்லி விட்டார் என்றும் ஜகத் தேசாய் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இன்று ரசிகர்களுக்கும் சினிமா வட்டாரத்தினருக்கும் சர்ப்ரைஸ் தரும் வகையில் அமலா பாலின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.