நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கடாவர்’ படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை அமலாபால். இந்தப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். ‘கடாவர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அமலா பால் பேசுகையில், ''கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களையும் பார்வையாளர்களையும் நேரில் பார்க்கும் போது உற்சாகமாக இருக்கிறது. ‘கடாவர்’ படத்தின் கதை புதுமையாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் அவர்கள் படத்தாயாரிப்பாளர்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். அதனால் நான் தயாரிப்பாளராகவும் மாறினேன். இதற்கு உற்றதுணையாக இருந்த எனது அம்மா மற்றும் சகோதரருக்கு நன்றி.
நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் வந்தது. இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எங்களின் கடாவர் படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக்கொண்டது.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ .டி. டியில் 'கடாவர்' வெளியாகிறது. பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் பெரிதளவில் வெளியானதில்லை. காவல்துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை என அனைத்து விசயங்களும் நேர்த்தியாக இருக்கும். ரசிகர்கள் வழக்கம்போல் இந்த 'கடாவர்' திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கடாவர்'. இதில் நடிகை அமலாபால் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.