அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்புக்கு பிறகே அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் கைதுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. படம் பார்க்க போனது ஒரு குத்தமா என்ற அளவில் அல்லு அர்ஜூனின் காலங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது அவருக்கு மட்டுமல்ல. அவரின் படம் பார்க்க பார்க்க வந்த பெண்மணிக்கும் தான். ஆம் படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி அல்லு அர்ஜூன் சிறையில் வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் தேதி அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தின் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதற்கு காரணம் அல்லு அர்ஜூன் முன்னறிவிப்பின்றி அதே திரையரங்கிற்கு படம் பார்க்க வந்ததாகவும் அதனால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது எனவும் குற்றச்சாட்டு எழுந்து புகார் வரை சென்றது.
இதையடுத்து அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அல்லு அர்ஜூனனை கைது சிறையில் அடைத்தனர். ஒரு இரவு சிறைக்கு பின் ஜாமினில் வெளியே வந்துள்ளார் அல்லு அர்ஜூன். ஆனால் அல்லு அர்ஜூனின் கைது பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, ஆங்காங்கே போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புரம் அம்மாநில முதலமைச்சரின் பலிவாங்கும் நடவடிக்கை என ரேவந்த் ரெட்டி மீது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதற்கு பதிலளித்த ரேவந்த் ரெட்டி, “ஒருவரை ஜெயிலுக்கு அனுப்பியது குறித்து இவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஒரு பெண் தன் உயிரை இழந்து இருக்கிறார். அவரைக்குறித்து நீங்கள் ஒரு துளியும் கவலைப்படவில்லை. அந்தப் பெண்ணின், குடும்பம் எப்படி இருக்கிறது.. அந்த ஏழை பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது? என்று எதுவும் கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் குழந்தை 11 நாட்களாக கோமாவில் இருக்கிறான். அவன் மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்டால் அம்மா இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? இது குறித்தெல்லாம் நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. சினிமாவில் நடிப்பது அவர் வேலை, பணம் குறைவாக வரப்போகிறது அல்லது அதிகமாக வரப்போகிறது. இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் இருக்கிறது” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில்தான் தற்போது ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அல்லு அர்ஜூன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “எண்கள் தற்காலிகமானவை. ஆனால் அன்பு என்றென்றும் இதயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. ரெக்கார்டுகள் முறியடிக்கப்படம் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நான் இப்போது இந்த முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அடுத்த 2-3 மாதங்களில், தெலுங்கு, தமிழ், இந்தி அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும் சரி, இந்த சாதனைகள் விரைவில் முறியடிக்கப்படும். அது முன்னேற்றம். அதாவது இந்தியா மேலே செல்கிறது. இந்த எண்கள் விரைவில் முறியடிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் அது வளர்ச்சி. நான் வளர்ச்சியை விரும்புகிறேன். நாட்டின் தலைநகரில் நிற்கும் ஒரு இந்தியனாக, உலகத்தின் எதிர்காலத்தை இந்தியா வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். உலகின் முன்னணி நாடாக இந்தியா திகழும். இது புதிய இந்தியா, அது நிற்காது, தலைகுனியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் அரசியலுக்கு வர உள்ளதாகவும் இதுதொடர்பாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை டெல்லியில் அவர் சந்தித்ததாகவும் தகவல் பரவியது. இதுகுறித்து அல்லு அர்ஜூன் டீம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ”அல்லு அர்ஜுன் அரசியலுக்கு வருவார் என்ற சமீபத்திய வதந்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு ஊடகங்கள் மற்றும் தனிநபர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். துல்லியமான அறிவிப்புகளுக்கு அல்லு அர்ஜுன் குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை நம்புங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்துதான் அல்லு அர்ஜூனின் கைது அரங்கேறியுள்ளதாக நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனால் தெலங்கானாவில் பரபரப்பு நிலவி வருகிறது.