அரசு போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டம், குறிப்பாக குரூப் 2, குரூப் 4 பணியிடங்களுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும் , ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II ( குரூப் 2 மற்றும் 2ஏ பணிகள் ) -க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.


அதேபோல, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV (குரூப் IV பணிகள் ) -க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு  உள்ளது.






பாடத் திட்டங்களைக் காண்பது எப்படி?


புதிய பாடத்திட்டங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை தனித்தனியாக https://tnpsc.gov.in/English/syllabus.html  மற்றும் https://tnpsc.gov.in/tamil/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.


தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக நேற்று முன்தினம் குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 


33 நாட்களிலேயே தேர்வு முடிவுகள்


அதேபோல குரூப் 4 தேர்வு முடிவுகளும் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விரைவாக வெளியிடப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக குரூப் 1 தேர்வு முடிவுகள் வெறும் 33 நாட்களிலேயே வெளியிடப்பட்டன. 


அசுரப் பாய்ச்சலில் டிஎன்பிஎஸ்சி


டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்ட பிறகு, தேர்வு பணிகள் முழு வீச்சில் வேகமெடுத்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், தற்போது போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.