டேவிட் வார்னர்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்திய மக்களிடம் எப்போதும் ஒரு சிறப்பு கவனம் பெறக்கூடியவர். வருடந்தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். முதலில் டெல்லி அணிக்காக விளையாடிய வார்னர் இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக விளையாடினார். தற்போது மறுபடியும் டெல்லி அணி சார்பாக விளையாடி வருகிறார். ஹைதராபாத் அணிக்காக ஐ.பி.எல் விளையாடிய போது டேவிட் வார்னர் தென்னிந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.


தனது அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல ஹிட் பாடல்களுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வந்தார். அல்லு அர்ஜூன் நடித்த ஆல வைகுந்தபுரமுலோ படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலுக்கு தனது குடும்பத்துடன் அவர் நடனமாடி வெளியிட்ட வீடியோ பட்டிதொட்டி எங்கும் வைரலானது. இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மற்றும் டேவிட் வார்னருக்கு இடையில் நல்ல நட்பு வளர்ந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒருத்தரை ஒருத்தர் புகழ்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வழக்கமாகி வருகிறது. 


மேலும் புஷ்பா படத்தில் டேவிட் வார்னர் நடித்தால் எப்படி இருக்கும் என்கிற வகையிலான வீடியோக்களையும் ரசிகர்கள் எடிட் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது உண்டு






புஷ்பராஜாக மாறிய டேவிட் வார்னர்






தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளார் வார்னர். மெத்தை விளம்பரம் ஒன்றில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பராஜ் கேரக்டரைப் போல் அவர் நடித்துள்ளது அல்லு அர்ஜூன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் இந்த வீடியோவில் எமோஜிக்களால் கமெண்ட் செய்துள்ளார்.


புஷ்பா 2


சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புஷ்பா 2  வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா , ஃபகத் ஃபாசில்  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தற்போது வரை புஷ்பா 2 படத்தின் இரு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன