தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு வெளியான புஷ்பா 2ம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. புஷ்பா படம் முடியும்போது புஷ்பா படத்தின் 3ம் பாக அறிவிப்புடன் முடித்திருப்பார்கள்.
புஷ்பா:
பாகுபலி, கே.ஜி.எஃப். வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா படங்களாகவே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது. புஷ்பா படமும் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனின் அறிமுக காட்சியில் அவரை போலீசார் கைது செய்யும் காட்சியில் அவர் போலீசாரிடம் சண்டையிட்ட பிறகு, அவர்களுக்கு லஞ்சம் தருவார்.
தமிழன் மட்டும் இளிச்சவாயனா?
அப்போது, போலீசார் அவரிடம் தம்பி நீ தமிழா? என்று கேட்பார். அதற்கு பச்சைத் தெலுங்கன் என்று கூறிச் செல்வார். தமிழில் வெளியான புஷ்பா படத்திலும் இதே வசனம் இடம்பெற்றிருக்கும். ஆனால், மலையாளத்தில் வெளியான புஷ்பா படத்தில் நீ எந்த ஊரு? என்ற கேள்விக்கு, அல்லு அர்ஜுன் பக்கா மலையாளி என்றும், கன்னடத்தில் வெளியான புஷ்பா படத்தில் கன்னடிகா என்றும் அல்லு அர்ஜுன் பேசுவது போல வசனம் இடம்பெற்றுள்ளது. இந்தியில் இப்படி ஒரு வசனம் இடம்பெறவில்லை.
அல்லு அர்ஜுனுக்கு கேள்வி:
புஷ்பா படத்தின் இரண்டாம் பாக வெளியீட்டின்போது, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் எங்கு சென்றாலும் அந்த மண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று அல்லு அர்ஜுன் பேசியிருப்பார். ஒவ்வொரு மொழியிலும் புஷ்பா படம் ரிலீசானபோது அந்த மொழி ரசிகர்களுக்காக அந்தந்த மாநிலத்தை முன்னிலைப்படுத்தி வசனம் வைத்த நிலையில், தமிழில் மட்டும் இவ்வாறு வசனம் இடம்பெற்றுள்ளது.
மற்ற மொழிகளில் அந்தந்த மொழியை, அந்தந்த மாநில மக்களையும் முன்னுரிமைப்படுத்தி வசனத்தை இடம்பெறச் செய்த புஷ்பா படக்குழு தமிழில் மட்டும் இப்படி செய்தது ஏன்? என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். புஷ்பா படமும், புஷ்பா 2ம் பாகமும் வெளியாகி இரண்டு ஆண்டுகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இந்த வாதம் இணையத்தில் எழுந்துள்ளது.
வீண் மோதல்:
திரைப்படங்களில் இடம்பெறும் இதுபோன்ற வசனங்களாலும், காட்சி அமைப்புகளாலும் இணைய தளங்களில் தேவையில்லாத ரசிகர்கள் மோதல் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மட்டும் பிற மாநிலங்களுக்குச் சென்று அந்தந்த மாநில மொழிகளை பெயருக்கு புகழ்வதை நிறுத்திவிட்டு உண்மையில் அதற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். புஷ்பா படம் மட்டுமின்றி புஷ்பா 2ம் பாகமும் தமிழ்நாட்டில் மாபெரும் வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.