புஷ்பா 2


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன்  நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை ஆட்டம் காண செய்து வருகிறது. புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு பான் இந்திய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகியது. 2024 ஆம் ஆண்டு மட்டுமில்லாமல் இதுவரை இந்திய சினிமாவில் எந்த படத்திற்கு இல்லாத வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது.  முதல் நாளில் உலகளவில் ரூ 282 கோடி இப்படம் வசூலித்தது. முன்னதாக ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதல் நாளில் 233 கோடி வசூலித்து அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதலிடத்தில் இருந்தது. தற்போது புஷ்பா 2 திரைப்படம் இந்த சாதனையை முறியடித்துள்ளது. 


இந்திய பாக்ஸ் ஆபிஸ் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த ஆர்.ஆர்.ஆர் , பாகுபலி 2 , ஜவான் ஆகிய எல்லா படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது புஷ்பா 2. படம் வெளியாகி நான்கு நாட்களே கடந்துள்ள நிலையில் உலகளவில் 829 கோடி இப்படம் வசூலித்துள்ளது. இன்னும் இரண்டே நாட்களில் படம் 1000 கோடி வசூலை கண்ணை மூடிக்கொண்டு எட்டிவிடும் என்று உறுதியாக கூறலாம். இந்திய சினிமாவில் அதிவேகமாக ஆயிரம் கோடி வசூலீட்டிய படமாக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2000 கோடி வசூலை இப்படம் எட்டும் என்றும் கூறப்படுகிறது. 


புஷ்பா 2 படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்றும் அதில் அல்லு அர்ஜூனின் சம்பளம் மட்டுமே 300 கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சினிமாவில் ஷாருக் கான் , விஜய் , ரஜினிகாந்த் போன்ற ஸ்டார்களின் சம்பளத்தைவிட அல்லு அர்ஜூன் அதிக சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.