அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் நடிகர் அல்லு அர்ஜூன் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.







தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜூன் கடைசியாக நடித்த அலவைகுந்தபுரமுலு மற்றும் புஷ்பா ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. இதில் 2 பாகங்களாக உருவாகும்  புஷ்பா படத்தின் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் படம் வெளியாகி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்தின் படப்பூஜை இன்று நடைபெறுகிறது. 






இதற்கிடையில் இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலங்கள் என பல இடங்களிலும் கலை, கலாச்சார போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற்றது. அந்த வகையில் அமெரிக்காவில்  நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்  75வது ஆண்டு  சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துபவராக அல்லு அர்ஜூன் அழைக்கப்பட்டார். 






அதன்படி நேற்று நடந்த அணிவகுப்பில் அல்லு அர்ஜூன் அவரது மனைவி  சினேகா ரெட்டியுடன் கலந்து கொண்டார். வெள்ளை நிற உடையில் தேசிய கொடியை அசைக்கும் வீடியோவை அவரது ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அல்லு அர்ஜூனும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அணிவகுப்பின் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதுவே வெளிநாடுகளில் நடக்கும் இந்திய சுதந்திர கொண்டாட்டத்தின் மிகப்பெரிய பேரணி என்றும், இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.கூட்டத்தில் அல்லு அர்ஜூன் உரையாற்றிய நிலையில் இந்த அணிவகுப்பு டைம்ஸ் சதுக்கத்தின் திரைகளிலும் காட்டப்பட்டது.