நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த சில நாட்கள் முன்பாக தெலங்கானா போலீஸால் கைது செய்யப்பட்டார். புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜூனை பார்க்க முண்டியடித்த கூட்டத்தில் ரேவதி என்கிற பெண் ஒருவர் உயிரிழந்தார் மேலும் அவரது 9 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் .
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது, ஹைதராபாத் போலீஸ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி காவல்துறை கைது செய்தது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டுகளுக்கு அல்லு அர்ஜூன் பதில்:
இதையடுத்து, அல்லு அர்ஜூனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தருணத்தில் தற்போது அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம்.
தெலங்கானா சட்டமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜூன் மீது அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு விளக்கம் அளித்துள்ள அல்லு அர்ஜூன், தன்னை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசியுள்ள அல்லு அர்ஜூன், "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். வெளிப்படையாகச் சொன்னால், இது யாருடைய தவறும் இல்லை. திரைப்படத் துறைக்கு அவர்கள் நிறைய ஆதரவைக் கொடுத்ததற்காக நான் உண்மையில் அரசாங்கத்திற்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
என்னை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. தயவு செய்து என்னை ஜட்ஜ் செய்ய வேண்டாம். தயவு செய்து எனது குணத்தை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. 21-22 வருட கடின உழைப்புக்குப் பிறகு இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
"தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்"
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நான் என் வாழ்நாளின் மூன்று வருடங்களை இந்தப் படத்திற்கு செலவழித்துள்ளேன். அதுதான் எனக்கு எல்லாமே. நான் அதை தியேட்டரில் பார்க்கச் சென்றேன். மேலும் இந்த திரையரங்கிற்கு 20-30 முறை வந்துள்ளேன்.
எந்தவித அனுமதியும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்று மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக தவறான தகவல் உள்ளது. அதில் உண்மையில்லை. திரையரங்கம் அனுமதி பெற்று நான் அங்கு சென்றேன். வழியில் போலீஸ்காரர்கள் இருந்தனர்.
அவர்களின் அறிவுறுத்தல்களின்படி நான் சென்றேன். உண்மையில் அனுமதி இல்லை என்றால், அவர்கள் என்னை திரும்பி செல்ல சொல்லி இருக்கலாம். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். நான் அதைப் பின்பற்றியிருப்பேன். எனக்கு அத்தகைய தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
நான் அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன். எனவேதான், உள்ளே சென்றேன். அது ஒரு ரோட் ஷோ அல்லது ஊர்வலம் அல்ல. தியேட்டருக்கு வெளியே கூட்டம் இருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் உங்களைப் பார்க்க வரும்போது அது அடிப்படை மரியாதை என்பதால் நான் கை அசைத்தேன்" என்றார்.