புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் தயாராகி வரும் நிலையில், அந்த படத்திற்கு முன்னாள் காவல்துறை ஐஜி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


புஷ்பா... புஷ்பராஜ்... 


குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அல்லு அர்ஜூன் இன்று முன்னணி நடிகராக உள்ளார். அவர் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், முதல் பாகத்தில் வில்லனாக பஹத் ஃபாசிலும் நடித்திருந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ரசிகர்களை கவர்ந்த புஷ்பா படம் சூப்பர் ஹிட்  ஆன நிலையில், வசூலிலும்  ரூ.400 கோடி வரை  வசூலித்ததாக சொல்லப்படுகிறது. 


இந்த படம் செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த தொழிலில் புஷ்பராஜ் (அல்லு அர்ஜூன்) எப்படி டான் ஆக ஆகிறார் என்பதை முதல் பாகம் “புஷ்பா - தி ரைஸ்” படம் சொல்லியிருந்தது. புஷ்பா படத்தின் 2 ஆம் பாகமான புஷ்பா - தி ரூல் படம் மிக வேகமாக  வளர்ந்து வருகிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அல்லு அர்ஜூன் தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தொடர்ந்து புஷ்பா எங்கே என்று பன்ச் வசனங்களுடன் கூடிய வீடியோ ஒன்று வெளியானது 


ரசிகர்களை கவர்ந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்


போஸ்டரில் மிகவும் கம்பீரமான லுக்கில், நகைகள் அணிந்து எலுமிச்சை மாலையுடன் புடவையில் காளி உருவத்தில் கர்வமாக நிற்கும் அல்லு அர்ஜூனின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்துக்கும் இந்த போஸ்டருக்கு என்ன சம்பந்தம் என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் இப்படத்தின் தயாரிப்பாளர்  மற்றும் இயக்குநர் சுகுமார் வீட்டில்
சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 


புஷ்பாவுக்கு எதிர்ப்பு 


இந்நிலையில் புஷ்பா திரைப்படம் குறித்து திருப்பதியைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஐஜி காந்தா ராவ் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், புஷ்பா: தி ரைஸ் படத்தில் ஒரு செம்மர கடத்தல்காரரை ஹீரோவாகக் காட்டினார்கள் . காவல்துறையை லஞ்சம் வாங்குபவர்களாக காட்டியது வேதனை அளிக்கிறது. 


இயக்குநர் சுகுமார் உட்பட குழுவினர் புஷ்பாவிற்காக எங்களிடம் வந்தபோது , ​​நாங்கள் பல விஷயங்களை செம்மரக் கடத்தல் தொடர்பாக தெரிவித்தோம். ஆனால் அவர்கள் முதல் பாகத்தில் இப்படி காட்டியுள்ளார்கள்.  கடத்தலைத் தடுக்க தங்கள் குடும்பத்தை விட்டுக் காடுகளுக்குச் சென்று பணிபுரியும் காவலர்களை இரண்டாம் பாகத்திலாவது சரியாகக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.