சமந்தா - தேவ் மோகன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’.
சகுந்தலா- துஷ்யந்தனின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு சமந்தா - தேவ் மோகன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சாகுந்தலம் படத்தில் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
அல்லு அர்ஜூன் - ஸ்நேஹா ரெட்டியின் இரண்டாவது குழந்தையான அல்லு அர்ஹாவுக்கு தற்போது 6 வயதாகியுள்ள நிலையில், அல்லு அர்ஜூனின் நெருங்கியத் தோழியான சமந்தாவுடன் அவர் அறிமுகமாகியுள்ளது டோலிவுட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அல்லு அர்ஜூன் ரசிகர்கள் இணையத்தில் அல்லு அர்ஹாவின் எண்ட்ரியைக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் முன்னதாக தன் மகள் அல்லு அர்ஹாவை தெலுங்குத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதற்காக இயக்குநர் குணசேகருக்கு நன்றி தெரிவித்து அல்லு அர்ஜூன் பதிவிட்டுள்ளார்.
யசோதா திரைப்படத்தை அடுத்து நடிகை சமந்தா நடிப்பில் பெரும் பொருட்செலவில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘சாகுந்தலம்’. இந்தத் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இன்று வெளியாகியுள்ளது.
முன்னதாக சாகுந்தலம் படம் குறித்து யாருக்கும் தெரியாத ஐந்து ரகசியங்கள் எனக் கூறி சமந்தா பகிர்ந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. “எனக்கு பூக்கள் அலெர்ஜி ஏற்பட்டது. நாள் முழுக்க பூக்களை என் கைகளிலும் கழுத்திலும் சூடிக்கொண்டு நடித்த நிலையில், பூக்களின் முத்திரை பதிந்து டாட்டூ போல் அது ஒட்டிக் கொண்டது. ஆறு மாதங்களுக்குப் பின் தான் அது சரியானது.
இரண்டாவதாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நான் டப் செய்தேன். சக நடிகர்கள் எப்படி இதை செய்கிறார்கள் எனத் தெரியவில்லை, தூக்கத்தில் கூட நான் வசனங்களை டப்பிங் நாள்களில் பேசத் தொடங்கினேன்” என சமந்தா கூறியுள்ளார்.
மேலும் “சாகுந்தலம் படப்பிடிப்பின்போது முயல் ஒன்று என்னைக் கடித்துவிட்டது. முயல்கள் வெறும் க்யூட்டான விலங்குகள் மட்டுமல்ல” எனவும் கவலையுடன் பகிர்ந்துள்ளார்.
அதேபோல் 30 கிலோ எடையுள்ள லெஹங்காக்கள் வரை அணிந்து தான் சாகுந்தலம் படத்தில் நடித்ததாகவும், அந்த லெஹங்காவை அணிந்து கொண்டு 10 முதல் 15 டேக்குகள் வரை வாங்கி நான் பல இடங்களில் நடித்ததாகவும், இறுதியாக சாகுந்தலம் படத்தில் இருப்பது தன் உண்மையான முடி அல்ல என்றும் சமந்தா பேசியுள்ளார்.