புஷ்பா 2 படத்தின் அதிவேக சாதனை:
தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனை, பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளது 'புஷ்பா 2' திரைப்படம். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், இந்த படத்தின் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரூ.350 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதே போல இந்த படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், அல்லு அர்ஜுன் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக காரணமாக அமைந்தது. அதன்படி கடந்த இரண்டு வருடமாக, ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்காக, அல்லு அர்ஜுனுக்கு மட்டும் ரூ.300 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
ரூ.1002 கோடி வசூல்:
டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் 'புஷ்பா 2' வெளியான நிலையில், அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஹிந்தியில் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. முதல் நாளே ரூ.294 கோடி வசூல் சாதனை செய்த 'புஷ்பா 2' திரைப்படம் தற்போது 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூல் செய்துள்ள தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு பாகுபலி, தங்கல், ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப், போன்ற படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தாலும், எந்த படமும் அதிவேகமாக, அதுவும் ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.1000 கோடி வசூலை எட்டியதில்லை. இதன் மூலம் புஷ்பா 2 திரைப்படம் எந்த திரைப்படமும், தென்னிந்திய திரை உலகில் செய்திடாத சாதனையை படைத்துள்ளது. மேலும் 'புஷ்பா 2' திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் வசூலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரித்து வருவதால் ரூ. 2000 கோடி வசூலை எட்டும் என பட குழுவினர் மற்றும் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.