2021ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா (69th National Film Awards) கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த படங்களைக் கொண்டு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த பாடகர், சிறந்த படத்தொகுப்பு, தொழில்துறை வல்லுநர்கள் என பல்வேறு பிரிவுகளில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
விருது வென்ற தமிழ் படங்கள்
தமிழில் இயக்குநர் மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி திரைப்படம் சிறந்த தமிழ் மொழித் திரைப்படம் விருதைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு சிறப்பு பிரிவில் விருது அறிவிக்கப் பட்டது. நடிகர் ஆர். பார்த்திபன் இயக்கி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘இரவின் நிழல்’ படத்தின் பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு விருது அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் விருது வழங்கும் நிகழ்ச்சி
இந்நிலையில் இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு , மற்றும் பிற மொழிகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்கள்.
விருதை பெற்றுக் கொண்ட அல்லு அர்ஜுன்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றுக் கொண்டார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது வெல்லும் முதல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் என்பது குறிப்பிடத் தக்கது.
விருது வென்ற தேவி ஸ்ரீ பிரசாத்
இதனைத் தொடர்ந்து புஷ்பா திரைப்படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.