சமீப காலங்களாக அடிக்கடி சமூக வலைதளங்களில் வம்பிற்கு இழக்கப்படுபவர் பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர். இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் பதிவு போட்டாலும் ஒரு சாரார் இவருடைய 'வீரே டி வெட்டிங்' என்ற படத்தில் வரும் காட்சியுடன் ஒப்பிட்டு வந்தனர். சமீபத்தில் அந்தப் படத்தின் மூன்றாவது ஆண்டு தொடர்பாகவும் இவர் ஒரு பதிவை செய்திருந்தார். அதுவும் பெரிய விவகாரமாக வெடித்தது. இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதள பதிவுகளுக்கு வரும் எதிர் கருத்துகள் தொடர்பாக ட்விட்டர் ஸ்பேசஸில் அவர் மனம் திறந்துள்ளார். 


அந்த ட்விட்டர் ஸ்பேசஸில் பேசியது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், "சமூக வலைதளம் என்பது ஓட்டல்,சாலை போன்ற ஒரு விர்சுவல் பொது தளம். ஆனால் அங்கு பொதுவெளியில் இருக்கும் குறைந்த பட்ச மரியாதை கூட கிடைப்பதில்லை. நான் அதில் ஒரு பூ படத்தை பதிவிட்டால் கூட அது என்னுடைய படத்தில் வந்த சுயஇன்ப காட்சியுடன் ஒப்பிடப்படுகிறது. அந்த ஒப்பிட்டு கருத்துகள் மிகவும் மோசமாக அமைந்துள்ளன. அவை ஒரு பெண்ணை சமூக வலைதளம் மூலம் மானபங்கம் படுத்தும் வகையில் அமைந்துள்ளன.


 






எனினும் அந்த மாதிரியான கருத்துகளை பார்த்து நான் பின்வாங்க போவதில்லை. அத்துடன் சமூக வலைதளங்களில் என்னுடைய செயல்பாட்டையும் குறைத்து கொள்ள போவதில்லை. நம்முடைய விர்சுவல் பொது தளத்தில் ஒரு போதும் இதுமாதிரியான  வெறுப்பு கருத்துகள், மதவெறி கருத்துகள் மற்றும் கொடுமைப்படுத்தும் வகையிலான கருத்துகளுக்கு இடம் தரக் கூடாது" எனக் கூறியுள்ளார். 


அவரின் இந்த கருத்தை பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துகள் அதிகமாக பதிவிட்டப்பட்டு வருவது வாடிக்கையாக அமைந்துள்ளது. ஸ்வரா பாஸ்கர் அடுத்து ஒரு குறுப்படத்தில் நடித்துள்ளார். இந்த குறும்படம் ஒரே பாலின சேர்க்கை தொடர்பான படம் என்று கூறப்படுகிறது. இப்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் தற்போது வரை திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.