அலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், திரைத்துறையினர், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.


ரன்பீர் கபூர் முன்னதாக பிரம்மாஸ்திரா பட விழாக்களில் பங்கேற்றபோது தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என அழுத்தமாக சொல்லி வந்த நிலையில், அவர் விரும்பியபடியே இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.


 






இந்நிலையில், அலியாபட்டின் பெண் குழந்தை இன்னும் சில ஆண்டுகளில் இப்படிதான் இருப்பார் எனக்கூறி, அலியாவின் க்யூட்டான குழந்தைக்கால புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.


இயக்குநரும், அலியாவின் அப்பாவுமான மகேஷ் பட், அலியாவை குழந்தைப்பருவம் முதலே பல வீடியோக்கள் எடுத்து பொக்கிஷம் போல் பாதுகாத்து வந்துள்ளார். இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டன. 


 






இந்நிலையில் தற்போது அலியா பெண் குழந்தைக்கு தாயானதை அடுத்து அவரது ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


பாலிவுட்டில் முன்னதாக தன் 10 ஆண்டுகள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டாடினார். மேலும்  கங்குபாய், டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா என அடுத்தடுத்து அலியா வெற்றிப்படங்களை அளித்துள்ளார். தற்போது தாயாக அடுத்த இன்னிங்ஸில் காலடி எடுத்து வைத்துள்ளார்.


அலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி, இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் மகிழ்ச்சியாக திருமண பந்தத்தில் நுழைந்தனர்.


திருமணத்தைத் தொடர்ந்து ஜூன் மாதம் தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அலியா அறிவித்து தங்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அலியா, முன்னதாக  தனது டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா படங்களின் ப்ரொமோஷன் பணிகளில் கலந்து கொண்டு அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.


கடந்த மாதம் அலியாவுக்கு வளைகாப்பு விழா அவரது மும்பை இல்லத்தில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் சூழ நடந்து முடிந்தது. அந்தப் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தன.