பான் இந்திய நடிகையாக தன்னை நிரூபித்துள்ள ஆலியா பட் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி திரை வாழ்விலும் ஒரு சிறப்பான முன்னேற்றமான ஆண்டாக அமைந்தது. கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் மூலம் பாக்ஸ் ஆபிஸை தட்டி தூக்கியவர் ஓடிடியில் வெளியான டார்லிங்ஸ் மூலம் வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்தார்.


ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுவரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் உலகளவில் பிரபலமாகியுள்ளார் ஆலியா பட்.


ஆலியாவின் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்க கல்லை பதித்தது பிரம்மாஸ்திரா திரைப்படம். தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த ஆண்டு தனது காதலரான ரன்பீர் கபூரை மணந்து கொண்டு ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார். 



ஆலியாவிற்கு ஹாட்ரிக் வெற்றி :


ஆர்.ஆர்.ஆர், பிரம்மாஸ்திரா மற்றும் கங்குபாய்  கத்தியவாடி என ஹாட்ரிக் வெற்றியால் தனது சிறப்பான நடிப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தற்போது காஷ்மீரில் நடைபெறும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானியின்' படத்தின் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டுள்ளார். இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் ஒரு நடிகையாக இருக்கும் ஆலியா பட் தற்போது வெரைட்டியின் Impactful International women 2023  2023 என்ற பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் தனது க்ரீடத்தில் மற்றுமொரு இறகை சேர்த்துள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களின் பட்டியலில் எம்மா தாம்சன், ரோசாலியாவுடன் ஆலியாவையும் சேர்த்துள்ளது பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது. 


ஒரே இந்திய நடிகை :


Impactful International women 2023 பட்டியலில் ஆலியா பட் இடம்பெற முக்கியமான காரணம் 2022ம் ஆண்டில் கங்குபாய் கத்தியவாடி,  ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த பிரம்மஸ்த்ரா: பார்ட் ஒன் - ஷிவா மற்றும் பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் அவரால் ரசிகர்களை கவர முடிந்தது. பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தனது திடமான நடிப்பால் சர்வதேச அளவில் பெற்ற அங்கீகாரம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகை ஆலியா பட் என்பது குறிப்பிடத்தக்கது.