ஆலியா பட் என் மூலமாக பெருமையை சுமந்து திரிபவர் அல்ல. அவர் ஒரு தனிச்சுடர் என தந்தை மகேஷ் பட் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகை ஆலியா பட். அவர் பாலிவிட்டில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ளார். இன்று பாலிவுட்டில் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகை. பல மெகா ப்ராஜக்ட்டுகளில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். அண்மையில் எல் என்ற பிரபல பொழுதுபோக்கு பத்திரிகைக்குப் பேட்டியளித்த அவர், "என்னுடன் எப்படி நானே நேரத்தை செலவழிப்பதை என்பதை அண்மையில் தான் கண்டுகொண்டேன்" என்று சுவாரஸ்யமாகப் பேசியிருந்தார்.
அவர் அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்தாவது, வேலை வேலை என்று நேரங்காலம் பார்க்காமல் ஓடும்போது நீங்கள் உங்களின் சுயத்தை இழந்துவிடுவீர்கள். ஏதோ மெஷினுக்கு ஆட்டோ மோட் போட்டது போல் வாழ்க்கை இயந்திரத் தனமாகிவிடும். என் தந்தை என்னிடம் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வார். நீ உனக்காக நேரம் ஒதுக்கு. உன்னுடன் செலவழிக்க நேரம் ஒதுக்கு. அது ஒரு சிறந்த உணர்வு. அந்த உணர்வை நான் இப்போது பெறுகிறேன். என்னுடன் எப்படி நானே நேரத்தை செலவழிப்பதை என்பதை அண்மையில் தான் கண்டுகொண்டேன். இதோ நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் போது கூட என்னுடனேயே நான் ஒரு கடற்கரையில் உலாவிக் கொண்டிருக்கிறேன். 4 வருடங்களுக்கு முன் இது எனக்கு சாத்தியமில்லை. எனக்கு எப்போது என்னைச் சுற்றி யாராவது இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என நினைப்பேன்" என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
தந்தையால் தான் இப்படி ஒரு மகிழ்ச்சியை அனுபவிப்பதாக ஆலியா பட் உருக அவரது தந்தை மகேஷ் பட்டோ மகளை தாறுமாறாக புகழ்ந்து தள்ளுகிறார்.
அவர் ஆலியா பட் குறித்து கூறியிருப்பதாவது:
எனது மகளின் தொழில் ரீதியான வெற்றியை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். அவளை பெற்றோரின் விழுதாக நான் பார்க்கவில்லை. அவர் ஒரு தனிச்சுடர். நான் ஒரு சினிமாக்காரர் என்றாலும் எங்கள் வீட்டில் சினிமாத்தனம் இருக்காது. எங்கள் வீடு என்றுமே பார்ட்டி களமானதில்லை. நான் படம் செய்தது நன்றாக வாழ்வதற்காக. அதுவும் ஆலியாவின் ஆன்மாவுக்குள்ளும் சென்றுள்ளது. அவர் முழு கவனத்துடன் வெறித்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த உலகில் நிறைய பார்வையாளர்கள் உண்டு. ஆனால் வெகுச்சிலர் தான் கலைஞர்களாக இருக்கின்றனர். அதனால், திரைப்படங்களை உருவாக்குவோர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. ஒரு படைப்பை உருவாக்கி அது எதைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொண்டும் மீண்டும் எழுந்து நடப்பவர்கள் சிறப்பானவர்கள்.
அதுவும் இதை இளம் வயதில் செய்பவர்கள் சாதனையாளர்கள். ஆலியாவுக்கு 2 வயதாக இருக்கும் போது நான் 50 வயதில் சம்பாதித்த அளவுக்கு வசதி இருந்தது. ஆனாலும் அவர் திரையில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளார். இவ்வாறு மகளை நினைத்து உருகிப் பேசியுள்ளார் மகேஷ் பட்.
ஆலியா பட் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் , சஞ்சய் லீலா பன்சாலியில் கங்குபாய் கத்தியாவாடி, பிரம்மாஸ்திரா ஆகிய படங்கள் வெளியாகக் காத்திருக்கிறார்.