பாலிவுட்டின் முக்கிய  நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார் இயக்குநர் மகேஷ் பட்டின் மகளுமான ஆலியா பட். தொடக்கத்தில் சினிமா வாரிசுதான் என்றும் நடிப்பில் திறமையற்றவர் என்றும் விமர்சிக்கப்பட்ட ஆலியா அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய திறமையை காட்டினார். இவர் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் ஆலியா பட் தான் கருவுற்றிருப்பதாக அறிவித்தார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அலியா, பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடித்து கலக்கி வருகிறார். ஆலியா நடித்துள்ள டார்லிங்ஸ் படம் வரும் 5ம் தேதி வெளியாகவுள்ளது. 






டார்க் காமெடி படமாக உருவாகியுள்ள டார்லிங்க்ஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஆலியா சினிமா தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆலியாவிடம், கர்ப்பமாக இருப்பதால் சினிமாவில் இருந்து கேப் எடுத்துக்கொள்வீர்களா எனக் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நீங்கள் ஹெல்த்தியாக, உடற்தகுதியுடன் இருந்தால் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சினிமாவில் பணியாற்றுவது எனக்கு திருப்தியை தருகிறது. இது எனக்கு பிடித்தவேலை. இதுதான் என் உடல்நிலை, ஆன்மாவை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது. நான் என்னுடைய 100 வயது வரை வேலை பார்ப்பேன் என்றார்.






ஆலியாவின் இந்த அதிரடி பேச்சை அவரது ரசிகர்கள் ஆஹோ, ஓஹோவென புகழ்ந்து தள்ளினர். சினிமா மீது இத்தனை வெறியா என பதிவிட்டனர். அதேவேளையில் ஆலியாவின் பேச்சு கடுமையான கிண்டலுக்கும் உள்ளானது. நான் என்னுடைய 90 வயது வரை நடிப்பேன் என கரீனா கூறினார். அதை அப்படியே காப்பி அடித்து 100 வயது என மாற்றிக் கூறுகிறாரா ஆலியா என அவரை பலரும் கலாக்கத்தொடங்கினர். அதுமட்டுமின்றி, கரன் ஜோகரை காட்பாதர் எனக் கூறியிருந்த ஆலியாவுக்கு கடின உழைப்பு எதற்கு எனவும் சிலர் கிண்டலாக கேள்வி எழுப்பினர். இது குறித்து பதிவிட்டுள்ள பாலிவுட் ரசிகர்கள் சிலர், ஆலியா அவர்களே, நீங்கள் நீங்களாவே இருங்கள். கரீனாவாக மாற வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.