அக்‌ஷய் குமாரின் செல்ஃபி படம் அவரது படங்களிலேயே மிக மோசமான வசூலை ஈட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பாலிவுட் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் அடித்து ஆடி ஹிட் படங்கள் கொடுத்து தயாரிப்பாளர்களின் விருப்ப நடிகர்களுள் ஒருவராக வளர்ந்தவர் அக்‌ஷய் குமார். 1990களில் ஆக்‌ஷனில் தன் பயணத்தைத் தொடங்கி வலம் வந்த அக்‌ஷய், தொடர்ந்து குடும்பம், காதல் என அனைத்து ஜானரிலும் தரமான  ஹிட் படங்கள் கொடுத்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்தார்.


ஒரு ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஹிட் படங்கள்  கொடுத்த நடிகர் எனும் சாதனையை இன்று வரை தன் வசம் வைத்துள்ள அக்‌ஷய் குமார், சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.


அதிலும் சென்ற ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த பச்சன் பாண்டே (ஜிகர்தண்டா ரீமேக்), சாம்ராட் பிரித்விராஜ்,  ராம் சேட்டு, ரக்‌ஷா பந்தன் ஆகிய படங்கள் மோசமான தோல்வியைத் தழுவின.


இந்நிலையில், 2019இல் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற டிரைவிங் லைசன்ஸ் படத்தை ரீமேக் செய்து முன்னதாக இவரது செல்ஃபி படம் வெளியானது.


இந்தியின் மற்றொரு பிரபல நடிகரான இம்ரான் ஹாஸ்மியுடன் அக்‌ஷய் குமார் இணைந்து நடித்த இந்தப் படம் பிப்.24 வெளியானது.


இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு நாள்கள் கடந்துள்ள நிலையில், செல்ஃபி படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருவதுடன் வசூலிலும் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 


மேலும், மிக மோசமான ஓப்பனிங்கை செல்ஃபி படம் பெற்றுள்ளதாகவும், அக்‌ஷய் குமாரின் படங்களில் மிக மோசமான வசூலை ஈட்டிய படம் என்றும் பாலிவுட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


செல்ஃபி படம் முதல் நாள் இந்தியா முழுவதும் 3 கோடிகள் மட்டுமே வசூல் செய்ததாகவும் இரண்டாம் நாள் 5.86 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 150 கோடி செலவில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜ் மேத்தா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.


 






முன்னதாக செல்ஃபி படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளின்போது நடிகர் அக்‌ஷய் குமார் தன் ரசிகர்களுடன் 3 நிமிடங்களில் மொத்தம் 184 செல்ஃபிக்கள் எடுத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.