கனடா குடியரிமையை தான் பெற்றது ஏன் என்பது குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் பேசியிருக்கிறார்.


பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் அக்‌ஷய்குமார். இவர் கனடா நாட்டு குடியுரிமையை சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார். இதனைக்காரணம் காட்டி அவர் பலமுறை சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இந்தியாவிற்கு ஆதரவான கருத்துக்களை கூறும் போது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 




அப்போது பேசிய அக்‌ஷய்குமார்,  “ ஒரு இந்தியன், இந்தியாவில் இருந்து வந்தவன், கடைசிவரை இந்தியனாகவே இருப்பான். கடந்த சில வருடங்களுக்கு முன்னர், என்னுடைய படங்கள் சரியாக போகவில்லை. கிட்டத்தட்ட 14 லிருந்து 15 படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் நான் வேறு எங்காவது சென்று, அங்கு வேலை செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தேன். நிறைய மக்கள் வேலைக்காக அங்கு இடம் பெயர்ந்து உள்ளனர். அவர்கள் இப்போது வரை இந்தியர்கள்தான்.


இங்கு எனக்கு விதி சரியில்லை என்றால் அங்கு சென்று ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அதற்காக அங்கு சென்ற நான் குடியுரிமைக்காக விண்ணபித்து அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றேன். ஆனால், எனது சினிமா கேரியர் வெற்றியை நோக்கி சென்றதையடுத்து, நான் இங்கே இருக்கலாம் என்ற முடிவை எடுத்தேன். அதன் பின்னர் எனக்கு இங்கிருந்து செல்ல வேண்டும் என்ற யோசனை தோன்றவில்லை.


என்னிடம் கனடா நாட்டு பாஸ்போர்ட் இருக்கிறது. பாஸ்போர்ட் என்றால் என்ன, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல பயன்படும் ஆவணம் அவ்வளவுதான். நான் ஒரு இந்தியன், நான் இங்கு எனது அனைத்து வரிகளையும் செலுத்துகிறேன். நான் எனது நாட்டில் வேலை செய்கிறேன். நிறைய பேர் விஷயங்களைச் சொல்கிறார்கள், அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களிடம், நான் ஒரு இந்தியன் என்றும், நான் எப்போதும் இந்தியனாகவே இருப்பேன் என்றும் கூற விரும்புகிறேன்.


 






சந்திரபிரகாஷ் திவிவேதி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், சஞ்சய் தத், மனுஷி சில்லார் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவான படம் சாம்ராட் பிரித்விராஜ் வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில், அண்மையில் வெளியான  ரக்ஷா பந்தன் படமும் படுதோல்வியை சந்தித்தது.