துணிவு பட வெற்றிக்குப் பிறகு ஏகே 62 படத்தை வரும் பிப்ரவரி மாதம் முதல் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்கவில்லை என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைமாறிய AK62 :
ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்று வசூலிலும் சாதனைகளை படைத்தது. இதனால் விக்னேஷ் சிவன் - அஜித் கூட்டணியில் உருவாக இருந்த AK62 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. AK62 திரைப்படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே ஓடிடி உரிமையை கைப்பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் விக்னேஷ் சிவன் AK62 திரைப்படத்தை இயக்க போவதில்லை என்றும் இயக்குனர் மகிழ் திருமேனி அப்படத்தை இயக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. விக்னேஷ் சிவன் கூறிய ஸ்க்ரிப்ட் மீது அஜித்திற்கு ஈடுபாடு இல்லை என்பது தான் காரணமாக கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் :
AK62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போன மகிழ் திருமேனி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் விக்னேஷ் சிவன் கூட்டணி மிஸ் ஆனதை நினைத்து சற்று வேதனையும் கொடுக்கத்தான் செய்கிறது. இருப்பினும் தவறிய இந்த வாய்ப்பு நிச்சயமாக எதிர்காலத்தில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
மீகாமன் அட்வான்ஸ் வெர்ஷன்தான் விக்ரம் :
மகிழ் திருமேனி இயக்கத்தில் 2014ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் 'மீகாமன்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான 'விக்ரம்' திரைக்கதையும் 'மீகாமன்' திரைக்கதையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அது மட்டுமின்றி இரண்டு படங்களிலும் இருந்த தேள் சிம்பிள், சிட்டி - சந்தானம், அவினாஷ் - ஜோஷ், பாரதி - பிஜாய், குரு - அடைக்கலம், அருள் - விக்ரம், ஜோதி - ரோலெக்ஸ் என அனைத்து கதாபாத்திரங்களின் ஒற்றுமை காணப்பட்டன. லோகேஷ் கனகராஜ் சொல்ல வந்த கான்செப்டை 2014-ஆம் ஆண்டே 'மீகாமன்' திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டார் மகிழ் திருமேனி என லோகேஷை ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். எனவே அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி சேரும் AK62 திரைப்படம் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விக்ரம் வெற்றியின் காரணம் :
இருந்தாலும் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் வசூலும் சிறிதளவு கூட 'மீகாமன்' திரைப்படத்துக்கு கிடைக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் விக்ரம் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு சிறிதும் சலிப்பு இல்லாமல் கூறப்பட்ட இமோஷன் சேர்ந்த திரைக்கதைதான்.