பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 75). விவசாயி. இவரது மனைவி மாக்காயி(70). இவர்களுக்கு மாக்காயி(53), காந்தி (50), செல்வாம்பாள் (48), சரோஜா (43) என 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி, அதே ஊரில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மாணிக்கம், மாக்காயி ஆகியோர் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். வழக்கமாக மாக்காயி காலையிலேயே எழுந்து வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிடுவது வழக்கம். ஆனால் நேற்று அவரது வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்காமலும், கதவு திறந்த நிலையிலும் இருந்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் மாணிக்கமும், மாக்காயியும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் தரைப்பகுதி மற்றும் சுவர்ப்பகுதியில் ரத்தம் தெறித்த நிலையில் இருந்தது. பீரோ திறந்து கிடந்தது. இது பற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் வீட்டின் முன்பு பொதுமக்கள் கூடினர். மேலும் அங்கு வந்த மாணிக்கத்தின் மகள்கள், தங்களது பெற்றோரின் உடல்களை கண்டு கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.




இதனை தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மாக்காயி கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கலியை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அதை தடுக்க முயன்று தாலிச்சங்கிலியை இறுகப்பற்றியுள்ளார். இதில் 7 பவுன் தாலிச்சங்கிலி அறுந்து தாலிக்குண்டு உள்ளிட்ட 1 பவுன் மாக்காயியிடமும், கருகமணி உள்பட 6 பவுன் சங்கிலி மர்ம நபர்களின் கையிலும் சிக்கியுள்ளது.மேலும் மாணிக்கம், மாக்காயி ஆகியோரை மர்ம நபர்கள் வீட்டிற்குள்ளேயே துரத்தி, துரத்தி அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதையடுத்து பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் மற்றும் வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் என போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் கொலை நடந்த நேரத்தில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் சாத்தப்பட்டிருந்ததால், தம்பதியின் மரண ஓலம் வெளியே கேட்காமல் இருந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.




மேலும் இந்த இரட்டை கொலை தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரட்டை கொலை சம்பந்தமாக இரண்டு விதமான விசாரணையை தொடங்கி உள்ளோம். நகை, பணத்தை கொள்ளையடிப்பதற்காக வந்தவர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக, உறவினர், உள்ளூர்வாசிகளே யாராவது இந்த கொலைகளை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக மிளகாய் பொடியை தூவிவிட்டு குற்றவாளிகள் சென்றுள்ளதால், பழைய குற்றவாளிகளா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அந்த பகுதியில் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.