ஏகே 62 படத்துக்கான இறுதி ஸ்க்ரிப்டை லைகா நிறுவனத்துடன் பகிர இயக்குநர் மகிழ் திருமேனி லண்டன் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு பட வெற்றிக்குப் பிறகு ஏகே 62 படத்தை இந்த மாதம் தொடங்கி விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்கவில்லை என கடந்த வாரம் தொடங்கி சமூக வலைதளங்களில் தகவல்கள் வலம் வரத் தொடங்கின.
முதலில் ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் எனத் தகவல்கள் வெளியான நிலையில், தொடர்ந்து இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
அதேபோல் ஏகே 62 தொடர்பான அறிவிப்பு வெளியாகி 8 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், அண்மையில் அஜித்தை சந்தித்து விக்னேஷ் சிவன் கதையை விளக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்தக் கதை தனக்கு பிடிக்கவில்லை என்றும் வேறு கதை தயார் செய்யுமாறும் அஜித் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அஜித் கதை பிடிக்கவில்லை என கூறிய பிறகும், அதை பொருட்படுத்தாமல் நேரடியாக லண்டனுக்கே சென்று, லைகா நிறுவன உயர்மட்ட அலுவலர்களிடம் விக்னேஷ் சிவன் கதையை கூறியதாகவும், ஆனால் கதை பிடிக்காமல் லைகா நிறுவனமும் விக்னேஷ் சிவனிடம் கடுமை காட்டியதாகவும் தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கு பாதகமான தகவல்கள் வெளியாகின.
ஆனால் இவை குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று காலை விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பயோ மற்றும் கவர் ஃபோட்டோவில் இருந்து ஏகே 62 பெயரையும், அஜித் ஃபோட்டோவையும் நீக்கியதாகத் தகவல்கள் வெளியாகின.
மேலும் விக்னேஷ் சிவனின் டிவிட்டர் பயோ மற்றும் கவர் ஸ்க்ரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இச்சூழலில் லைகா நிறுவனம் இயக்குநர் மகிழ் திருமேனியை ஏகே 62 படத்துக்காக உறுதி செய்துள்ளதாகவும், ஏகே 62 படத்துக்கான இறுதி ஸ்க்ரிப்டை லைகா நிறுவனத்துக்கு பகிர இயக்குநர் மகிழ் திருமேனி லண்டன் சென்றுள்ளதாகத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன.
இயக்குநர் அஜித்தும் லண்டன் டூர் சென்றுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில், மகிழ் திருமேனி தற்போது அஜித்தையும் அங்கு சந்தித்து படத்தில் ஒப்பந்தம் ஆவது உறுதி செய்யப்படும் என்றும், ஏகே 62 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிழ் திருமேனி இறுதியாக உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.