தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடந்த வந்த நிலையில், ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்ட அஜித், ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அஜித் பிரேக் எடுத்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங்குக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் சென்னை திரும்பியுள்ள அஜித் விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.






வங்கி கொள்ளை..


`ஏகே 61’ திரைப்படம் உண்மைச் சம்பவமாக நடைபெற்ற வங்கிக் கொள்ளை நிகழ்வு ஒன்றைத் தழுவி உருவாகப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கிய `சதுரங்க வேட்டை’, `தீரன்: அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கசிந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பெரிய வங்கி செட்டை உருவாக்கி உள்ளனர் படக்குழுவினர். சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள 102 ஆண்டுகள் பழமையான எஸ்பிஐ வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு Your Bank என்ற பெயரில் மிகப்பெரிய செட்டை ராமோஜி பிலிம் சிட்டியில் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் கசிந்துள்ளன. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகிவிட்ட நிலையில் இனி விறுவிறுவென படம் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






ஃபர்ஸ்ட் லுக்


இதற்கிடையே, ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வரும் ஆகஸ்ட் 13 -ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி பிறந்தநாளை முன்னிட்டு இதனை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஸ்ரீதேவி நடித்த  ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ படத்தில் அஜித் எந்த சம்பளமும் வாங்காமல் நடித்தார். தொடர்ந்து அவரது கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிப்பில்  ‘நேர்கொண்ட பார்வை’ ‘வலிமை’, உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக, இருவரும் இணைந்துள்ளனர்.


`ஏகே 61’ திரைப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கெக்கென், மகாநதி சங்கர் முதலானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றியுள்ளார்