தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. 2023ம் ஆண்டிற்கு பிறகு இந்த படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் நாளை மறுநாள் வெளியாகிறது. 

20 ஆயிரம் டிக்கெட்:

பொங்கல் வெளியீடாக  வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்கான டிக்கெட் புக்கிங் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்கில் டிக்கெட்டுகள் விற்பனை தீர்ந்து விட்டது. 

இ்ந்த நிலையில், சென்னையின் பிரபலமான திரையரங்கில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் மட்டும் விடாமுயற்சி படத்திற்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. இதை ரோகிணி தியேட்டர் நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று கொண்டாடப்படும் நடிகராக அஜித் உள்ளார். அதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் இந்த டிக்கெட் விற்பனை நடந்துள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் படம் வருவதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட இந்த படம் வெளிநாட்டில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பெருநகரங்களிலும் விடாமுயற்சி படத்திற்கான டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

மகிழ்ச்சியில் லைகா:

மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வழக்கமான அஜித் படமாக இல்லாமல் மாறுபட்ட குடும்ப ஆக்ஷன் படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ட்ரெயிலரும், டீசருமே அவ்வாறுதான் இருந்தது. 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜானில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, நார்வே, ஆஸ்திரியா, அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் ரிலீசாகிறது. தொடர் தோல்வியால் துவண்டுள்ள லைகா நிறுவனத்திற்கு விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.