கோலிவுட் உச்சநட்சத்திரம் அஜித்குமார் 'துணிவு' திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது மகிழ் திருமேனி இயக்கும் 'ஏகே 62' திரைப்படமான 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். 


விடாமுயற்சி ஷூட்டிங்:


லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் 'விடாமுயற்சி' படத்தில் தற்போது மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் அஜித்குமார். மேலும் இப்படத்தில் திரிஷா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார்கள். கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்தது.  


 



படப்பிடிப்பு தீவிரம்: 


இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்னர் நடக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாக துவங்கியதால் ஒரு சில ஷெட்யூல்களிலேயே தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்து விட முடிவு எடுத்ததால், அஜர்பைஜான் நாட்டில் முழுவீச்சில் பெரும்பாலான காட்சிகளை எடுத்துவிடலாம் என திட்டமிடப்பட்டது. தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக அஜித்குமார் எடுத்த முடிவு இது என கூறப்படுகிறது.  


திடீர் வருகை :


அந்த வகையில் எந்த ஒரு தடங்கலும் இன்றி, தீபாவளிக்கு கூட படக்குழு ஊர் திரும்பாமல் விடாமுயற்சியுடன் 'விடாமுயற்சி' படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். தற்போது நடிகர் அஜித்குமார் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். அவர் அஜர்பைஜான் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்தில் மிகவும் கெத்தாக வந்து இறங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.  இந்த திடீர் வருகைக்கு என்ன காரணமாக இருக்கும் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  


பிரேக் எடுத்த அஜித் :


'விடாமுயற்சி' படக்குழு படப்பிடிப்பில் இருந்து ஐந்து நாட்கள் பிரேக் எடுத்து கொண்டு சென்னை திரும்பி உள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக துபாய் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். 2024 தீபாவளிக்கு விடாமுயற்சி திரைப்படம் சரவெடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



இது தான் காரணமா?


கலைஞரின் நூற்றாண்டு விழா நவம்பர் 24ம் தேதியான இன்று பிரம்மாண்டமாக  நடைபெற உள்ளது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன்,   உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ள நிலையில் விஜய், அஜித் உள்ளிட்டோரும் வரவேற்கப்பட்டுள்ளனர். 


படப்பிடிப்பில் இருந்து அவசர அவசரமாக அஜித்குமார் சென்னையில் திரும்பியதற்கு காரணம் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக தான் இருக்கும் என கூறப்படுகிறது. ஓரிரு நாளில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்று விடுவார் என கூறப்படுகிறது.