தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வரும் அஜித்குமார் கடந்த ஓராண்டாக கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தனியார் ஆங்கில யூ டியூப் தொலைக்காட்சிக்கு அஜித்குமார் பேட்டி அளித்தார். அதில் அஜித்குமார் பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
அஜித் கை ப்ளேடால் கிழிப்பு:
2005ம் ஆண்டு இது நடந்தது. ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் கை கொடுக்க விரும்பினார்கள். ஏராளமான மக்கள் கை கொடுத்தனர். நான் காரின் உள்ளே சென்று பார்த்தபோது கையில் இருந்து ரத்தம் வழிகிறது. அதன்பின்புதான் எனக்குத் தெரிந்தது. ப்ளேடால் கையை கீறியுள்ளார்கள் என்பதை உணர்ந்தேன்.
அஜித் ஏக்கம்:
எனது மகன் அழுதுகொண்டே என்னிடம் கேட்பான். அப்பா நீங்கள் ஏன் மற்ற அப்பாக்களைப் போல, என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறீர்கள்? என்று கேட்பான். உங்களுக்கேத் தெரியும். இந்தியாவில் நான் கார் ஓட்ட இயலாது. ஒருவேளை நான் யாராலும் கவனிக்கப்பட்டால் 50 -60 மோட்டார்சைக்கிள்கள் புகைப்படம் எடுக்க பின்தொடர்ந்து வருவார்கள். அப்படி நடந்தால் அனைவரது உயிர்களும் ஆபத்தில் சிக்கும்.
துரதிஷ்டவசமாக மற்ற ஓட்டுனர்களைப் போல நானும் மோசமான விபத்துகளில் சிக்குகிறேன். ஆனால், நான் ஒரு நடிகர் என்பதால் மக்கள் நான் எப்போதும் விபத்தில் சிக்குவதாக நினைக்கிறார்கள். திரையுலகில் மட்டும் எனக்கு129 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. நான் ஒரு நேர்மறையான எண்ணம் கொண்ட நபர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இணையத்தில் பேசுபொருளான அஜித்:
அஜித்குமார் இது மட்டுமின்றி சமீபத்தில் நடந்த கரூர் துயர சம்பவம் குறித்தும், திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம் குறித்தும், ரசிகர்கள் மோதல் குறித்தும் விரிவாக தனது பேட்டியில் பேசியுள்ளார். குறிப்பாக, அஜித் கரூர் விவகாரம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அஜித்தின் இந்த பேட்டிக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். ரசிகர்களை வழிநடத்தும் நோக்கில் அவர் இவ்வாறு அறிவுரைகளை வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அஜித்குமார் பொதுவெளியில் வருவதை பெரும்பாலும் தவிர்த்தே வருகிறார். சமீபகாலமாகவே அவர் அடிக்கடி பொதுவெளியில் வருவதும், பேட்டிகளும் அளித்து வருகிறார்.
மேலும், அஜித்தின் கருத்துக்கள் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்த காலத்தில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் கருணாநிதிக்கு முன்பே நடிகர்களை கட்டாயப்படுத்தி விழாக்களில் பங்கேற்க வைக்கின்றனர் என்று அஜித் பேசியிருந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அந்த விவகாரத்திற்கு பிறகு பொதுவெளியில் பேட்டி அளிப்பதை கடந்த பல ஆண்டுகளாகவே அஜித் தவிர்த்து வந்தார். தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்று வரும் சூழலில் தொடர்ந்து பேட்டிகள் அளித்து வருகிறார்.