தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை காெண்ட நடிகர் அஜித்குமார் தற்போது மோட்டார் ரேஸிங்கில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது அஜித்குமார் ரேஸிங் அணி உலகெங்கும் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது.
இந்த நிலையில், தனியார் யூ டியூப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அஜித்குமார் பல விஷயங்கள் குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது,
பொதுவெளியில் நடப்பது எப்படி?
கடந்த தேர்தலில் ஒரு சம்பவம் நடந்தது. ரசிகர்கள் அந்த பூத்திற்கு நான் மட்டுமின்றி யார் வந்தாலும் புகைப்படங்கள் எடுத்தனர். நான் ஒரு ரசிகரின் போனை பறித்தேன். அந்த வீடியோ இணையத்தில் பரவியது. அதில் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் நான் மிகவும் பொறுமையாகவே இது தேர்தல் பூத் என்று கூறினேன். அவர்கள் அதை கேட்கவில்லை. பின்னர் அது நடந்தது. நான் ஒரு கெட்டவன் போல பார்க்கப்பட்டேன். அந்த இளைஞர் விதிகளை மீறி பாதிக்கப்பட்டவர் போல ஆகிவிட்டார். பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்பது அனைவருக்கும் பொருந்தும். பிரபலங்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
முடிவுக்கு வர வேண்டும்:
திரையரங்கில் முதல்நாள் முதல் காட்சி. அதை நாம் ஊக்குவிக்கக்கூடாது. இன்று நான் நல்ல வாழ்க்கை வாழ்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன். சில விஷயங்கள் கண்காணிக்கப்படுகிறது. திரையரங்கில் கொண்டாட்டம் என்ற பெயரில் பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை கிழிப்பது, திரையை சேதப்படுத்துவது, திரையை மறைத்துக் கொண்டு ஒன்ஸ்மோர் கேட்பது திரையரங்கம் இதை செய்யாவிட்டால் திரையை கிழிப்பது, இது எல்லாம் முடிவுக்கு வர வேண்டும்.
ஊடகங்களும் இதை பெரிதாக்கிவிடும். இந்த நடிகரை காட்டிலும் இந்த நடிகருக்கு பெரிய கூட்டம் வந்துள்ளது என்று ஊடகங்கள் பெரிதாக்குகிறது. மற்ற நடிகரின் ரசிகர்கள் அடுத்த முறை நாம் இதைவிட அதிகம் காட்ட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சினிமாவில் தனி வழி:
அஜித்குமார் மற்ற நடிகர்களை காட்டிலும் மிகவும் தனித்துவமான நடிகராக திரையுலகில் திகழ்கிறார். உச்சநட்சத்திரமாக அவர் உலா வந்தாலும் தனது ரசிகர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கலைத்துவிட்டார். மேலும், அவரது திரைப்படங்களுக்காக இசை வெளியீட்டு விழாக்களும் நடத்தப்படுவதில்லை. அவரது படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படுவதில்லை என்பதால் சில திரையுலக பிரபலங்கள் அவரை விமர்சிப்பதும் உண்டு.
ரசிகர்களுக்கு தொடர் அறிவுரை:
தற்போது கார் ரேஸிங்கில் தொடர்ச்சியாக அவர் பங்கேற்று வரும் சூழலிலே அவர் பேட்டிகள் அளித்து வருகிறார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியிலும் விஜய் வாழ்க, அஜித் வாழ்க என கூறிக்கொண்டே இருக்கும் ரசிகர்கள் நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்? என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அஜித் மேலே கூறியது போல, தற்போதைய காலகட்டத்தைக் காட்டிலும் கடந்த காலங்களில் ஒன்ஸ்மோர் கேட்டு திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பதும், ஒன்ஸ்மோர் திரையிடாத திரையரங்குகளில் திரைகள் மற்றும் இருக்கைகளை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் அரங்கேறியதும் நடந்துள்ளது. இதன் காரணமாகவே அஜித்குமார் தற்போது ரசிகர்களுக்கு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.