நடிகர் அஜித் - இயக்குனர் விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான ஆரம்பம் படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.


இரண்டாவது முறையாக இணைந்த கூட்டணி


2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் பில்லா படம் வெளியானது. அப்போது பழைய படங்களை ரீமிக்ஸ் செய்வது தொடர் கதையாக இருந்த நிலையில் ரஜினி நடித்த பில்லா படத்தை அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். பார்த்து பழகிய கதையாக இருந்தாலும் ஹாலிவுட் ஸ்டைலிலான மேக்கிங் பில்லா படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்று மாபெரும் வெற்றி பெற வைத்தது. இப்படியான நிலையில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்தது. அந்தப் படம் தான் ஆரம்பம்.


இந்தப் படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா ரகுபதி, அப்துல் குல்கர்ணி, கிஷோர், ஆடுகளம் நரேன் என பலரும் நடித்திருந்தனர். ஓம் பிரகாஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.


படத்தின் கதை


கல்லூரியில் படிக்கும் போதே டாப்ஸி மீது ஆர்யா ஒரு தலை காதல் கொள்கிறார். படிப்பு முடிந்ததும் டாப்ஸி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக தனது பணியை தொடர, ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர். இதனிடைய நயன்தாரா உதவியுடன் அஜித்தை நட்பை பெறுகிறார் ஆர்யா. எதையும் ஹேக் செய்வதில் வல்லவரான ஆர்யாவை, டாப்ஸியை கடத்தி வைத்துக் கொண்டு அஜித் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அரசியல் புள்ளிகளின் அக்கவுண்டை ஹேக் செய்ய வைக்கிறார்.


அதே சமயம் போலீஸ் அரசியல் ஆகியவற்றில் முக்கிய பதவிகளில் இருந்து கொண்டு திருட்டுத்தனமாக தீவிரவாதிகளுக்கு உதவும் கருப்பு ஆடுகளுக்கும் அவர் குறி வைக்கிறார். இது ஏன் என்பதை ஃப்ளாஷ்பேக் காட்சிகளோடு தெரிவிக்கிறது ஆரம்பம் படம்.


பிளாஷ்பேக்கில் வரும் கதையில் ராணா மற்றும் அஜித் இருவரும் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் மும்பை காவல்துறையின் உயர் அதிகாரிகள். உயிருக்கு உயிரான நண்பர்களாக இருக்கும் இருவரும் ஒரு தீவிரவாத செயலை தடுக்க செல்லும் போது அஜித் கண்ணெதிரே ராணா உயிரிழக்கிறார். அவரது இறப்புக்கு காரணம் தரம் அற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தான் என கண்டு பிடிக்கும் அஜித், அதன் மூலம் காவல்துறை, அரசியல் அதிகாரிகளின் பேராசையால் ஊழல் இருப்பதை கண்டு எதிர்ப்பதோடு, அவர்களின் பகையை சம்பாதிக்கிறார். இதனால் அஜித் மீது அவப்பெயர் சுமத்தப்படுகிறது. இதற்குப் பழிக்குப் பழியாக அஜித், ஆர்யாவை கொண்டு பல சம்பவங்களில் ஈடுபடும் காட்சிகளாக இப்படம் திரைக்கதை செல்லும்.


மிரட்டிய காட்சிகள்


மங்காத்தா படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் முழுக்க முழுக்க அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். பெரிய அளவில் அலட்டிக் கொள்ளாத நடிப்பு, பார்வையிலேயே மிரட்டுவது, பஞ்ச் வசனங்கள் என கிட்டத்தட்ட மினி வில்லத்தனம் காட்டி இருந்தார் அஜித். 


கிட்டத்தட்ட இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு 15 மாதங்கள் நடந்தது. ஆனால் அஜித்தின் 53வது படம் என்று குறிப்பிடப்பட்ட விளம்பரங்கள் செய்யப்பட்டது. முதலில் வெளியான படத்தின் டீசரிலும் தலைப்பு இடம் பெறாததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இதன் பிறகு ரிலீசுக்கு ஒரு மாதம் முன்பே ஆரம்பம் என்று பட தலைப்பிடப்பட்டது. 


மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக முதலில் அனுஷ்கா ஷெட்டி, அமலாபால், காஜல் அகர்வால் ஆகியோர் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு இறுதியாக பில்லாவில் நடித்த நயன்தாராவையே விஷ்ணுவர்தன் தேர்வு செய்தார். மேலும் 2வது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த ரிச்சா கங்கோபாத்பாய் பரிசீலனை செய்யப்பட்டு பின்னர் டாப்ஸி நடித்தார். 


பொதுவாக விஷ்ணுவர்தன் படங்கள் யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் பாடல்கள் தொடங்கி பின்னணி இசை வரை மிரட்டி இருந்தார் யுவன். குறிப்பாக ஒரு காட்சியில் அஜித்தை கைது செய்து அழைத்துச் செல்வது போன்று கதை இருக்கும். அதில் காவல்துறை அதிகாரி அஜித் மீது கை வைத்ததும் அவர் திரும்பி முறைத்து பார்க்கும் காட்சியில் போட்டிருக்கும் பின்னணி இசை அந்த காலகட்டத்தில் மிகப் பிரபலமானது. 


இப்படி சாதாரணமான ஒரு கமர்சியல் படத்தை மேக்கிங்கில் சிறப்பாக கொண்டு வந்து வெற்றி பெற செய்ய வைக்கலாம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தால் விஷ்ணுவர்தன்.