தீனா படம் ரீ-ரிலீஸை கொண்டாட சென்ற இடத்தில் விஜய் பேனரை அஜித் ரசிகர்கள் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் கடந்த 2001 ஆம் ஆண்டு தீனா படத்தில் நடித்தார். ஏ.ஆர்.முருகதஸ் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவான முன்னிறுத்தியதில் தீனா படத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. இதனிடையே தற்போது பழைய படங்கள் அதிகளவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஜித் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நடித்த தீனா படம் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 






இப்படியான நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் உற்சாக மிகுதியில் அஜித் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்தனர். இதில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. இதன் வீடியோ மிகுந்த வைரலான நிலையில் அடுத்ததாக இன்னொரு வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது சென்னையின் பிரபலமான காசி தியேட்டரில் அஜித் தீனா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதையொட்டி பேனர் வைக்கப்பட்டது. 






இன்று காலையில் கூடிய ரசிகர்கள் பேனருக்கு மாலை அணிவித்தும், பாலாபிஷேகம் செய்து, மேளம் அடித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது சிலர் அருகே இருந்த விஜய் நடித்த கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் பேனரை கிழித்தெறிந்தனர். இது தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவர்களிடையேயும், அந்த வழியாக சென்றவர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் சம்பந்தப்பட்ட ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அஜித் - விஜய் இடையே தொழில் ரீதியாக போட்டி இருப்பதாக சொல்லப்பட்டாலும், இருவரும் திரைக்கு பின்னால் நல்ல நண்பர்களாகவே வலம் வருகின்றனர். நிறைய பேர் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினாலும் சிலர் கேட்பதே இல்லை. சமூக வலைத்தளங்களில் வார இறுதி நாட்கள் ஆனாலே  இரு தரப்பு ரசிகர்களிடையேயும் வாக்குவாதம் எல்லை மீறும் அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.