தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். இவருக்கு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது அணியை களமிறக்கினார்.
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்:
24 மணி நேர பந்தயமாக நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி தங்களது முதல் முயற்சியிலே 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற அஜித்குமாருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நீங்க எப்போ வாழப் போறீங்க?
அஜித் துபாயில் உள்ள தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். பயணங்கள் பிடிக்கும். படம் பாக்குறீங்க. என்னை புத்துணர்ச்சி செய்து கொள்ள உதவுகிறது. வாழ்க்கையின் முக்கியமான விஷயம் பயணம்.
எல்லாம் நல்லது தான். அஜித் வாழ்க.. விஜய் வாழ்க. நீங்க எப்போ வாழப் போறீங்க? உங்கள் அன்புக்கு மிக்க மிக்க நன்றி. தயவு செய்து உங்கள் குடும்பத்தைப் பாருங்கள். எனது ரசிகர்கள் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று கேள்விபட்டால் மிக மிக மகிழ்ச்சிப்படுவது நான்தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அஜித் பேசிய இந்த வீடியோ தற்போது இந்த இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தொடக்கம் முதலே தனது ரசிகர்கள் தங்களது குடும்பத்திற்காக நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும், படத்தை படமாக பாருங்கள் என்றும் அறிவுறுத்தி வருகிறார்.
ரசிகர்கள் மோதல்:
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். ரஜினி - கமலுக்கு பிறகு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் இருவரது ரசிகர்களும் இணையத்தில் மிக மோசமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் வருகின்றனர்.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பியதும் உண்டு. இந்த நிலையில், நடிகர் அஜித் ரசிகர்கள் நாங்கள் வாழ்ந்தது போதும். நீங்கள் வாழ்வது எப்போது? என்று அறிவுறுத்தியுள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நிலையில் தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தை நம்பி அரசியல் களத்தில் குதித்துள்ளார். அஜித்தின் இந்த அறிவுரையை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.