தமிழ் திரையுலகிற்கு வரும் பொங்கல் பண்டிகை மிகவும் கொண்டாட்டமான பண்டிகையாக அமைய உள்ளது. வரும் பொங்கலுக்கு துணிவு படமும், வாரிசு படமும் நேருக்கு நேர் மோத உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
எதிர்பார்ப்பை எகிறவைக்கும் துணிவு:
இந்த நிலையில், துணிவு படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. வங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரெயிலரில் அஜித்குமார் கொள்ளை கூட்டத்தின் தலைவனாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிகிறது.
தமிழ் திரையுலகிலே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களில் அஜித்குமார் முதலிடத்தில் உள்ளார். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அவர் நடித்து வெளியான படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது. அந்த வகையில் வெளியான படங்களின் பட்டியலை கீழே காணலாம்.
- வாலி
1999ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த அஜித் அசத்தியிருப்பார். அதில், அண்ணன் அஜித் தம்பி அஜித் மனைவி மீது ஆசைப்படும் நபராக வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்தப்படம் இப்போதும் அஜித் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாகும்.
- வரலாறு
2006ம் ஆண்டு வெளியான வரலாறு திரைப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். அந்த படத்தில் தாய்க்காக தந்தையை பழி வாங்கும் மகனாக வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தும் அஜித் இடைவேளையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பார்.
- மங்காத்தா
2011ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இந்த படத்திற்கு பிறகே மிகப்பெரிய ஹீரோக்களும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டினர். மங்காத்தாவில் சூதாட்ட பணத்தை கொள்ளையடிக்க அர்ஜூன் – அஜித் இணைந்து தீட்டும் திட்டம் கிளைமேக்சில் வெளிப்படுவது படத்திலே மிகப்பெரிய ட்விஸ்டாக அமைந்தது. அதுவே படத்தின் மாபெரும் வெற்றியாக அமைந்தது.
இந்த படங்கள் தவிர அட்டகாசத்தில் குருவாகவும், ஆரம்பத்தில் அசோக்காகவும், வேதாளத்தில் ப்ளாஷ்பேக் காட்சியிலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அஜித். மேற்கண்ட படங்கள் அனைத்தும் அஜித்தின் மாபெரும் வெற்றிப்படங்களின் வரிசையில் அமைந்த திரைப்படங்கள் ஆகும். மேற்கண்ட படங்களைப் போலவே துணிவிலும் அஜித் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் துணிவு படமும் மாபெரும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.