பொங்கல் என்றாலே சர்க்கரை பொங்கல், கரும்பு, புத்தாடை மட்டும் தானா அடுத்து என்ன பொங்கல் ரிலீஸ் திரைப்படங்கள்தானே. ஒவ்வொரு பொங்கலுக்கும் மாஸ் நடிகர்களின் திரைப்படங்களின் ரிலீஸ்காக மிகவும் ஆவலுடன் காத்து இருப்பார்கள் ரசிகர்கள். அந்த வகையில் ஜனவரி 10ம் தேதியான அன்று கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஒன்றோடு ஒன்று நேரடியாக மோதிக்கொண்டன. 


2014ம் ஆண்டு விஜய்யின் 'ஜில்லா மற்றும் அஜித்தின் 'வீரம்' நேரடியாக மோதிக்கொண்டன. அதே போல 2019ம் ஆண்டு ரஜினிகாந்தின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படங்கள் ஒன்றாக ஒரே நாளில் களம் இறங்கி கடுமையாக போட்டியிட்டு தாறுமாறாக வசூலில் சாதனை செய்தன. 


 



 


2014-ஆம் ஆண்டு வெளியான ஜில்லா மற்றும் வீரம் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதியதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவியது. அதே பரபரப்பான சூழல் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 11-ஆம் தேதியன்று நிகழவுள்ளது. அஜித், விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'வாரிசு மற்றும் 'துணிவு' திரைப்படங்களுக்கு இரண்டு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் உச்சத்தில் இருக்கும் ஆர்வமும் உற்சாகமும் எந்த வகையில் குறையவே இல்லை. 


2014ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' திரைப்படம் ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்து இருந்தது அதே போல அஜித்தின் 'வீரம்' திரைப்படம் குடும்பத்திற்காக போராடும் ஒரு கதையாக வெளியானது. இரண்டு திரைப்படங்களும் செண்டிமெண்ட் கதைகளாக இருந்தாலும் வசூலிலும் விமர்சனங்களிலும் மேலோங்கி இருந்தது. 


அதே பாணியில் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் ஒரு குடும்ப சென்டிமென்டை கையில் எடுத்துள்ளார். குடும்பத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது 'வாரிசு' திரைப்படம் என்பது சமீபத்தில் வெளியான டிரைலர் மூலம் நிரூபணமாகிறது. விஜய்க்கு என்றுமே ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். இதை நன்கு அறிந்த விஜய் தற்போது சென்டிமென்ட் கதையை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.




சமீபகாலமாக அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்', 'விஸ்வாசம்', 'வலிமை', 'வேதாளம்' என அனைத்துமே சென்டிமென்ட் திரைப்படங்களாகவும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் மூலம் பெண்களுக்கு குரல் கொடுக்கும் திரைப்படமாக வெற்றி கண்டவர். ஆக்ஷன் படங்களோடு சேர்த்து குடும்பம் சென்டிமென்ட்டும் கையில் எடுத்த அஜித் தற்போது மீண்டும் முழு நீள ஆக்ஷனில் இறங்கியுள்ளார் என்பது 'துணிவு' படத்தின் டிரைலர் மூலம் தெரிகிறது. 


எந்த ஜானர் திரைப்படமாக இருந்தாலும் ரசிகர்கள் அவர்களின் ஃபேவரட் ஹீரோக்களை கொண்டாட தயாராகிவிட்டார்கள். ஆக்ஷன், சென்டிமென்ட் படங்களில் இருந்து சற்று நகர்ந்து இவர்கள் அழுத்தமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை ரசிகர்கள் மத்தியில் பதிய வைக்க முடியும் என்பதை கருத்தாக தெரிவித்து வருகிறார்கள் திரை விமர்சகர்கள்.