தல ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான காலமாக இருந்து வருகிறது. துணிவு படம் வெளியானதிலிருந்து மீண்டும் எப்போது திரையில் அவர்களின் ஃபேவரட் தல வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப செய்தியாக வந்து கொண்டு இருக்கிறது.


தொடர்ச்சியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து தெறிக்கவிடும் வகையில் நடிகர் அஜித் படங்கள் வெளியாக மிகவும் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன. 




மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு இதுவரையில் அஜர்பைஜானில் மும்மரமாக நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 


அங்கேயே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு படங்களிலும் பேக் டூ பேக் நடித்து வரும் அஜித் இடைப்பட்ட நேரத்தில் இயக்குநர் பிரஷாந்த் நீல் சந்திப்பு நடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 







நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்களின் கூட்டணி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் உருவாக இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அது கே.ஜி.எஃப் 3 படமாக இருக்கலாம் என சமூக வலைத்தளம் எங்கும் வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல என இருதரப்பினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிரஷாந்த் நீல்  - அஜித் கூட்டணி தகவல் உண்மைதான் என்றாலும் அது  கே.ஜி.எஃப் 3 என்பது உண்மையல்ல என கூறப்படுகிறது. மேலும் தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, படத்திற்கு பிறகு பிரேக் ஒன்று எடுத்துக்கொள்ள உள்ளார் என்றும் அதற்கு பிறகு அவர் கமிட்டாகியுள்ள சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.


அப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது நிறைவு பெற்ற பிறகே பிரஷாந்த் நீல் உடனான கூட்டணி நடைபெறும் என கூறப்படுகிறது. பிரஷாந்த் நீல் - அஜித் இணைவது மூலம் பான் இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்படுவார். விரைவில் இது குறித்த தெளிவான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.