'குட் பேட் அக்லி' மாஸ் ஹிட்:

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் நடிப்பில், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரியா பிரகாஷ் வாரியர், பிரசன்னா, பிரபு, அர்ஜூஸ் தாஸ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்த படம், அஜித்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு மையில் கல் என கூறலாம்.

குட் பேட் அக்லி வசூல்:

ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை ஒரு இயக்குனர் என்பதை தாண்டி அஜித்தின் ரசிகராக இயக்கி இருந்தார். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் 'குட் பேட் அக்லி' படத்தை மிக பெரிய வெற்றிப்படமாக மாற்றினர். இந்த படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில், இதுவரையில் ரூ.280 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

ஓடிடி ரிலீஸ் தேதி:

அடுத்தடுத்த புது படங்களின் வரவால், 'குட் பேட் அக்லி' வாஷ் அவுட் ஆகி வருகிறது. மேலும் படம் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் 'குட் பேட் அக்லி' படத்தை சூட்டோடு சூடாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 8ஆம் தேதி இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெட்பிளிக்ஸ்:

இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.95 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு அஜித் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரியவில்லை. அதே நேரம் இன்னும் சில மாதங்கள் அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளதால்... கார் ரேஸ் முடிவடைந்த பின்னரே தன்னுடைய அடுத்த படம் குறித்து முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராட்டு விழா:

 அண்மையில் கார் ரேஸ் மூலம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என நடிகர் யோகி பாபு உட்பட சிலர் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.