நடிகர் அஜித் தனது 62வது படத்திற்கு பிறகு மீண்டும் உலகம் முழுக்க பைக்கில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவரது பயண திட்டத்திற்கான பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு துணிவு படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் 3வது முறையாக அஜித் இப்படத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனங்களையே பெற்ற துணிவு படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கைன், பாவ்னி, அமீர் என பலரும் நடித்திருந்தனர். துணிவு படத்தின் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், படமானது கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் வேகமாக நடந்து வந்த போது, மறுபக்கம் சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அடுத்த சில வாரங்களில் அஜித் மீண்டும் பிரேக் எடுத்துக்கொண்டு லடாக் பயணத்தை மேற்கொண்டார். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், மறுபக்கம் அஜித் பப்ளிசிட்டி தேடுவதாக சர்ச்சையும் எழுந்தது. ஆனால் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் அஜித் அமைதி காத்து வருகிறார். இதனிடையே லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித்தின் 62வது படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் கதை உள்ளிட்ட விஷயங்கள் திருப்திகரமாக அமையாததால் விக்னேஷ் சிவன் கழட்டி விடப்பட்டார். தொடர்ந்து மகிழ்திருமேனி அஜித்தின் 62வது படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் அஜித் உலக நாடுகளில் பைக் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்திற்கு ride for mutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் இந்த முறை அஜித் எங்கே செல்ல உள்ளார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.