ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து, அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, படத்தின் கதாநாயகியும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையுமான மஞ்சு வாரியர் துணிவு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதாக தெரிவித்து இருந்தார். 


 






பஞ்சாபில் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து, இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததையடுத்து டப்பிங் பணிகள் மும்மரமாக நடைபெற்று அதுவும் நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இப்படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்து உள்ளார்.


வேற லெவல் அஜீத்:


அதில் போனி கபூர் கூறும் போது, “ அஜித்துடனான இந்த பயணம் அழகானது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. அதனால்தான் நாங்கள் 3 படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். ஒரு நடிகராக அவருக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அவரிடம் காந்த குரலும், ஆழமான கண்களும் இருக்கின்றன. அவரின் தோற்றமே அனைத்தையும் கடத்தி விடும். மிகச்சிறந்த குணத்தை அவர் பெற்று இருக்கிறார். அவரை சுற்றி இருக்கும் ஒரு வித உணர்வும் மிக நன்றாக இருக்கிறது. இதுக்கு மேலே நான் என்ன சொல்ல முடியும்.” என்று பேசினார்.


மேலும்  துணிவு படத்தை பற்றி பேசிய போனி கபூர்,  “ அஜித்தின் ரசிகர்கள் நிச்சயம் அஜித்திடம் வேறு மாதிரியான ஒன்றை இந்தப்படத்தில் எதிர்பார்க்கலாம். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அஜித்தின் இந்த புதிய அவதாரம் நிச்சயம்  அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அவரது தோற்றமே அவரின் கதாபாத்திரத்தை பற்றி பேசுகிறது” என்று பேசி இருக்கிறார்.