ஸ்டார் நட்சத்திரங்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கும் இந்த வேளையில் எவர் கிரீன் படங்களாக பல ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பல படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவதும் அதை இன்றைய தலைமுறையினர் கொண்டாடுவதும் தான் தற்போதைய ட்ரெண்ட்.
அந்த வகையில் ரஜினிகாந்த் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்த 'பில்லா' படம் 1980ம் ஆண்டு வெளியானது. ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் ஸ்ரீப்ரியா, தேங்காய் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த காலகட்டத்திலேயே 250 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடி வசூலிலும் சாதனை செய்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
17 ஆண்டுகளுக்கு பிறகு அப்படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் நடிகர் அஜித் குமாரை வைத்து 2007ம் ஆண்டு ரீ மேக் செய்தார். என்ன தான் ரீ மேக் படமாக இருந்தாலும் அஜித்தின் ஸ்டைல் டச் அந்த படத்தை வேறு விதமாக மாற்றியது. அஜித் திரைப்பயணத்தில் ஒரு டர்னிங் பாயிண்ட் படமாக அமைந்தது 'பில்லா' திரைப்படம். நயன்தாரா, சந்தானம், பிரேம்ஜி, நமீதா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா அசத்தலாக இசையமைத்து இருந்தார். அவருக்கும் இப்படம் மிகப்பெரிய பாராட்டை பெற்றுக்கொடுத்தது. அஜித் நடித்த பில்லா படமும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.
சமீப காலமாக பல ஆண்டுகளுக்கும் முன்னர் மக்களின் பேராதரவை பெற்ற படங்கள் மீண்டும் புது பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. முத்து முதல் ஆளவந்தான் வரை ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்கள் அனைத்தையுமே ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள். அந்த வகையில் இந்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட்டான விண்ணை தாண்டி வருவாயா, சிவா மனசுல சக்தி, 96 , ப்ரேமம், 3 என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி காதலர்களை குஷிப்படுத்தின.
அந்த வகையில் பில்லா திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. அடுத்ததாக விஜய்யின் கில்லி, பிரபுதேவா கஜோலின் மின்சார கனவு, அஜித்தின் காதல் மன்னன், கார்த்தியின் பருத்திவீரன் உள்ளிட்ட படங்கள் வரும் மாதங்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன. ரசிகர்களுக்கு இந்த தகவல் மிக பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. திரையரங்கில் வெளியாகும் லேட்டஸ்ட் படங்களுக்கு நிகரான ஒரு எதிர்பார்ப்பும் வரவேற்பும் இந்த ரீ ரிலீஸ் படங்களுக்கும் கிடைக்கிறது என்பது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்.