‛தல’ அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறது படக்குழு. படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக், போட்டோக்களைத் தொடர்ந்து, வலிமை படத்தின் முதல் பாடல் லிரிக் வீடியோ நேற்று இரவு 10:45 மணிக்கு வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூரின் ‛பே வியூ’ நிறுவனம் தயாரிக்கும் வலிமை படத்தின் பாடல் வெளியானதுமே சோனி மியூசிக் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் தல ரசிகர்கள் போட்டி போட்டு பாடலை கண்டு ரசித்தனர். எதிர்பார்த்தபடியே முதல் பாடலை துள்ளல் பாடலாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வழங்கிய நிலையில், படத்தின் பாடல் வரிகளை இயக்குனர் விக்னேஷ்சிவன் எழுதியிருந்தார்.




நீண்ட நாட்களுக்குப் பின் தத்துவம்


பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படங்களில் தத்துவப்பாடல்கள் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அஜித் சில காலமாக தனது பாடல்களில் தத்துவங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வந்தார். ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் படியான கருத்துக்கள் சமீபத்திய அஜித் படங்களில் இல்லை. ரசிகர் மன்றங்களை அவர் கலைத்தநிலையில், ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் படலத்தை அஜித் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் தான் தற்போது வலிமை படத்தில் மொத்தத்துக்கும் சேர்த்து வைத்து இறக்கியிருக்கிறார். முழுமுழுக்க ரசிகர்களுக்காக, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமான வரிகளுடன் தத்துவத்தையும் கூறியிருக்கிறார் அஜித். அஜித் பாடல் எழுதவில்லை என்றாலும், அஜித் ஒப்புதல் இல்லாமல் அவரது படத்தின் எந்த அம்சம் சேர்க்கப்படாது என்பது சினிமா பார்வையாளர்கள் அனைவரும் அறிந்ததே. 




‛‛உன் வீட்டை முதல் பாரு...


அட தானாவே சரியாகும் உன் ஊரு!


கருத்து சொல்ல நான் ஞானி இல்ல


ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல!


நாளைக்கு நிம்மதியா நீ இருக்க


இன்னைக்கு இறங்கி செதுக்கிடனும்


உன் எண்ணத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா


எல்லாமே அழகாகும்... சரியாகும்!’’


என்கிற அந்த வரிகளுடன் இன்னும் பல ரசிகர்களுக்கான அறிவுரைகளை இன்றைய மொழியில் பேசியிருக்கிறார். இல்லை இல்லை... பாடியிருக்கிறார் அஜித். உற்சாகமாக ஆடியிருக்கிறார். யாரும் எதிர்பாராத இந்த வரிகளின் பின்னணியில் மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராகிவிட்டாரா அஜித் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. தியேட்டர்கள் திறக்குமா இல்லையா என்கிற நிலை ஒருபுறம். படப்பிடிப்பிற்கு பிரச்னை மறுபுறம் என இருவேறு பிரச்னைகளுக்குப் பின் நீண்ட இடைவெளி கடந்து வலிமை வரப்போகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தனிமையில் இருந்த அஜித், ரசிகர்களுக்காக ஏதோ சொல்ல வருகிறாரோ என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. எது எப்படி இருந்தாலும், அதற்கு அஜித் என்கிற தனிமனிதர் தான் வடிவம் தர முடியும். ஏனென்றால், தனது கருத்துக்கள், விருப்பங்கள் அனைத்தையும் அவர் மூலம் மட்டுமே அறிய முடியும். காரணம் அவருக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. தோற்றத்தில் மட்டுமல்ல கருத்திலும் வலிமையில் அஜித் மாறியிருக்கிறார் என்றே தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான் வலிமை பாடல் வரிகள் என்றே தோன்றுகிறது.