ஆகஸ்ட் 1ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை முதல் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கும் என குறிப்பிட்டார். கோவில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை" என்று பெயர் பலகை வைக்கப்பட்டு அர்ச்சகரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


அவர் குறிப்பிட்டது போலவே  கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையினை  ஆகஸ்ட் 3 ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அந்தப் பதாகையில், குருக்களின் பெயர்களும் அலைபேசி எண்களும் இடம்பெற்றது. இது குறித்து அப்போது தெரிவித்த அமைச்சர், முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் திருக்கோயில்களில் “அன்னை தமிழில் அர்ச்சனை” என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.




தமிழக அரசின் இந்த முன்னெடுப்புக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தை குறிப்பிட்டு அஜித்தின் பாடல் ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். பில்லா திரைப்படத்தில் வரும் சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா பாடல்தான் இப்போது வைரல். அப்பாடலில் வரும் 


''ஏறு மலை ஏறு! எங்கண்ணனை நீ பாரு!
ஆறு முகம் யாரு? நம்ம நண்பன்தானே கூறு!
தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு!
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?''


என்ற வரிதான் இப்போது கவனம் பெற்றுள்ளது. பாடல் வரியில் வருவது போலவே தற்போது தமிழுக்கு அர்ச்சனை மாறிவிட்டது என இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற சேவல் கொடி பாடலை பா.விஜய் எழுதி இருந்தார். யுவன் இசையில் விஜய் யேசுதாஸ் அப்பாடலை பாடியிருந்தார்.



 


சும்மாவே தல ரசிகர்களை பிடிக்க முடியாது... இது வேறு சிங் ஆகிவிட்டது. இனி பலர் காலர் டியூன்களில் சேவல் கொடி பறக்குதடா பறக்கும்!