பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திராவின் உதவியாளர் மீது தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி நடைபெற்றது.






இதனிடையே பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக தமிழில் நடிகர் கமல்ஹாசன், இந்தியில் அனில் கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, கன்னடத்தில் ஜெயந்த் கைகினி, மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் ஆகியோர் படத்திற்கான முன்னுரை குறித்த உரையை பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் படத்தில் இடம் பெற்ற நடிகர்,நடிகைகள் தவிர்த்து நடிகர்கள் நாசர், காளிதாஸ் ஜெயராம், சித்தார்த்,நிழல்கள் ரவி,  இயக்குநர் மிஷ்கின், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பிரபலங்கள் செல்ல தனி பாதை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அவர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் போது அவர்களை பாதுகாக்க பவுன்சர்கள் உடன் சென்றனர். பிரபலங்களை புகைப்படம் எடுக்க பவுன்சர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. 






அச்சமயம் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பவுன்சர்கள் பிரபல சினிமா பிஆர்ஓ சுரேஷ் சந்திராவின் உதவியாளர் விக்னேஷ் என்பவரை தாக்கினர். விக்னேஷூம் அவர்களை பதிலுக்கு தாக்கினார். இதனையடுத்து அங்கிருந்து ஊடகத்தினர் பவுன்சர்களை எப்படி விக்னேஷை தாக்கலாம் என கேள்வியெழுப்பினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது