2024 ஆம் தீபாவளி


2024 ஆம் ஆண்டு தீபாவளி வரும் அக்டோபர் 29 ஆம் தேதி கொண்டாடப் பட இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி விடுமுறையில் பல்வேறு படங்கள் போட்டிபோட்டுக் கொண்டு வெளியாகின்றன. படம் நன்றாக இருக்கோ இல்லையோ முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் எப்படி இருந்தாலும் திரையரங்குகள் நிறைந்து விடும் உத்திரவாதமே தீபாவளியில் படங்களை வெளியிடுவதில் சாதகமான அம்சம் . அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. 


விடாமுயற்சி 




மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி இந்த ஆண்டு தீபாவளிக்கு உறுதியாக வெளியாகும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ச் தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றுள்ளது. விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இடைவேளையின் போது விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 


விடுதலை 2




வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்தார்கள். ஆனால் படத்தின் கதை பெரியது என்பதால் இந்தப் படத்தை எடுத்து முடிப்பதில் நிறைய காலம் தேவைப்பட்டதாக வெற்றிமாறன் தெரிவித்தார். மேலும் முந்தைய பாகத்தில் இருந்த நடிகர்களுடன் இரண்டாவது பாகத்தில் இன்னும் சில நடிகர்கள் இணைந்துள்ளார்கள். விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கங்குவா




சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படமும் இந்த தீபாவளியை குறிவைத்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யா , திஷா பதானி , பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பீரியட் டிராமாவாக உருவாகியுள்ள கங்குவா படம் சூர்யா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது


எல்.ஐ.சி


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் எல்.ஐ.சி. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை தயாரித்துள்ளது. க்ரித்தி ஷெட்டி இப்படத்தில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். ரொமேண்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரெடியாகி வருகிறது