விடாமுயற்சி


துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்தபடியாக ஒப்பந்தம் செய்த படம் விடாமுயற்சி , தடையறத் தாக்க , மீகாமன் , தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேணி இந்தப் படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் அஜர்பைஜானின் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறிப்பிடப் படாத காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் படம் கைவிடப்படவில்லை என்றும், வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் ரசிகர்களுக்கு உறுதியளித்தது. 


விடாமுயற்சி தாமதத்திற்கு காரணம் என்ன ?


இந்நிலையில், விடாமுயற்சி படம் பாதியில் நிற்க அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த மே 10ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருந்தாலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தாமதமானதின் உண்மையான காரணம் தெரியாமலே இருந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன்படி விடாமுயற்சி படத்தை தயாரித்து வந்த லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் ரஜினிகாந்த் நடித்து வந்த வேட்டையன், கமலின் இந்தியன் 2 என இரண்டு பிரம்மாண்டமான படங்களையும் தயாரித்துள்ளது. மூன்று படங்களும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், ஒரு சமயத்தில் ஒரு படத்திற்கு முன்னுரிமை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன் படத்தில் முதலில் கவனம் செலுத்து முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இதனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு


தற்போது குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஜூன் இறுதிக்குள் விடாமுயற்சி படக்குழு மீண்டும் அஜர்பைஜானில் படப்பிடிப்பைத் தொடர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 30 முதல் 35 நாட்கள் வரை படப்பிடிப்பு பாக்கியிருப்பதாகவும், துபாயைத் தொடர்ந்து புனேவில் படப்பிடிப்பு முடிவடைய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது . வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.