அஜித் குமார்


கடந்த ஆண்டு தொடக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியானது. இதனை அடுத்து கடந்த ஒரு ஆண்டு காலமாக அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஒரு சிங்கிள் அப்டேட் வருமா என்று தவம் கிடக்கிறார்கள் ரசிகர்கள். மகிழ் திருமேனி இயக்கத்தில் துபாயில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் டைட்டில் மற்றும் ஒரு சில படப்பிடிப்பு வீடியோக்களைத் தவிர விடாமுயற்சி படத்தின் அப்டேட் எதுவும் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. 


குட் பேட் அக்லி


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் நடிகர் அஜித் தனது அடுத்த படத்தின் இயக்குநரை உறுதி செய்தார். த்ரிஷா இல்லனா நயன்தாரா , மார்க் ஆண்டனி படங்களை இயக்கி ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் 63ஆவது படத்தை இயக்க இருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.






இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக அஜித் இன்ட்ரோ சாங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாகவும், இப்படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் தோன்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் இப்படம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், மறுபக்கம் கடந்த ஓராண்டாகக் காத்திருந்த விடாமுயற்சி படம் என்னதான் ஆனது என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்!