ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘துணிவு’ படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரைட்ஸ் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித் நடித்துள்ளார். இந்த கூட்டணியில் முதலில் வெளியான  நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான   ‘வலிமை’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இவர்கள் இணைந்திருக்கும் 3 ஆவது படத்தை  ரசிகர்கள் எதிர்நோக்கி எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.


 






இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக அஜித் உட்பட பலரும் அங்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது படம் அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் 6 மாதங்களாக படம் குறித்தான எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது.


 


 






ரசிகர்களின் ஏக்கங்களை போக்கும் வகையில் கடந்த 21 ஆம் தேதி மாலை படத்தின் டைட்டில் ‘துணிவு’ என்று அறிவிக்கப்பட்டதோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. மாஸ் லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து அடுத்த நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி படத்தில் இருந்து இராண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது.


 






படம் பொங்களுக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில், படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரைட்ஸ் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவல்களின் படி, படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயிண்ட் மூவிஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட இருப்பதாகவும், படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமையை கலைஞர் டிவி வாங்கி இருப்பதாகவும், ஓடிடி ரைட்ஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


 






உண்மை என்ன? 


இது தொடர்பாக அஜித் தரப்பிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எங்களுக்கு அந்தத்தகவல் குறித்தான எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் சொல்லப்படவில்லை. ஆனால் ஒருவேளை அது குறித்தான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள். முன்னதாக போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான இருபடங்களுமே ஜி ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.