தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். தமிழ்நாட்டில் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்று அவருக்கு 51வது பிறந்த நாள் ஆகும். இதையடுத்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு திரை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை நடிகர் அஜித் குமாருக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், பல்வேறு திரை பிரபலங்கள் நடிகர் அஜித் உடனான சந்திப்பு, நிகழ்வுகள் போன்றவற்றை டிவி ஷோக்கள், ட்விட்டர், இன்ஸ்டா போன்றவற்றில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், உழைப்பாளர் தினம் மற்றும் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் டிவி மே தின சிறப்பு நிகழ்ச்சி AK யின் மே Day என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அதற்கான ப்ரோமோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதில், காமெடி நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டு நடிகர் அஜித் உடனான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ ப்ரோமோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய தாடி பாலாஜி, "வாலி படத்தில் நடிப்பதற்கு மறைந்த நடிகர் விவேக் சார்தான் காரணம். அவர்தான் என்னை இயக்குநர் எஸ்ஜே சூர்யாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன் மூலமே எனக்கு வியாதி கதாபாத்திரம் கிடைத்தது. ஆனால், வாலி படத்தில் அஜித் சாரை பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைக்கவில்லை.
அதன்பிறகு தீனா படத்தில்தான் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதுவும் அவருக்கு நண்பராக. தீனா படத்தில் ஆட்டோ ஓட்டும் சீன் ஒன்று எனக்கு இருந்தது. அந்த படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் என்னை ஆட்டோ ஓட்ட கூப்பிட்டார். எனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது. அதையே ஏ.ஆர். முருகதாஸ் சாரிடம் சொன்னேன். என்னது உனக்கு ஆட்டோ ஓட்ட தெரியாதா என்று அனைவரது முன்பும் மைக்கில் கத்திவிட்டார்.
அப்பொழுது, அங்கே வந்த அஜித் சார் என்ன இங்க பிரச்சினை என்று கேட்டார். அதற்கு முருகதாஸ் இவனுக்கு ஆட்டோ ஓட்ட தெரியாதாம் என்று தெரிவிக்க, இதை கேட்ட அஜித் சாரும் ஒரு மாதிரி முகத்தை வைத்துகொண்டு ஓட்ட தெரியாதா என்று என்னை கிண்டல் செய்தார். அதன்பிறகு எனக்கு பதிலாக அவரே ஆட்டோ ஓட்டினார். அன்று அவர் ஆரம்பித்து வைத்ததுதான் இன்னும் என் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்